500 போராளிகளுக்கும் 27 குழந்தைகளுக்கும் என்ன நடந்தது? - சிவசக்தி ஆனந்தன்
இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட 500 மேற்பட்ட போராளிகள் மற்றும் 27குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியை எழுப்பினார். முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் கடற்படை முகாம் வரை நேற்று பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து வருட காலமாக தங்கள் உறவுகளை தேடிக்கொண்டு பல போராட்டங்களை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள் இதற்கு ஐநா மனித உரிமை பேரவையும் அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற பதிலை முன்னாள் ஆட்சியாளர்களும் சரி இந்நாள் ஆட்சியாளர்களும் சரி உரிய பதிலை வழங்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் நீர்த்துப்போக செய்வதற்கு அரசாங்கம், ஐநா மட்டுமல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய காரணகர்த்தாக்களாகவுள்ளனர். அத்தோடு ஜெனீவா மனித உரிமை பேரவையில் மூன்று தடவை காலநீடிப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் நான்கு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரிக்கவும் ஐம்பத்து இரண்டு நாள் அரசியல் குழப்பத்திற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கி இவர்களது போராட்டத்தை நீர்த்துபோகச் செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் கொடுரதன்மையின் முக்கிய விடயமாக போராளிகளோடு கைதுசெய்யப்பட்ட 27 குழந்தைகளின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூறமறுப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.