உள்ளூராட்சி தேர்தலில் மறைந்திருக்கும் சதி! சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட தகவல் -

ஆசிரியர் - Editor II
உள்ளூராட்சி தேர்தலில் மறைந்திருக்கும் சதி! சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட தகவல் -

எமது மக்கள் உதயசூரியனுக்கு அளிக்கும் வாக்கானது இந்த தேர்தலில் மறைமுக நிகழ்ச்சி நிரலைத் தடுக்க உதவும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சாஸ்திரிகூளாங்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நடைபெறவுள்ள தேர்தலைப் பொறுத்தவரை உள்ளூராட்சி சபைகளின் செயற்திட்டங்களுக்கு அப்பால் வேறு ஒரு மறைமுக நிகழ்சி நிரல் இருப்பதை எம்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக எமது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாக கூறி அதற்கென முழு நாடாளுமன்றத்தையும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றி, அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு இடைக்கால அறிக்கைக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் ஒப்புதலைப் பெறுவதே அந்த மறைமுக நிகழ்சி நிரலாகும்.

இந்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து தரப்பினர் மற்றும் தமிழ்தரப்பில் பங்குபற்றியவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த அறிக்கை வெளிவரவில்லை என்பதுடன், பெரும்பான்மை தேசிய இனமான சிங்கள தேசிய இனத்தையும், பௌத்த மதத்தையும் திருப்திப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஒட்டு மொத்தத்தில் இந்த வழிநடத்தல் குழுவில் இடம்பெறிறருந்த அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அவர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலிருந்து விலகியிருப்பதை காணமுடிகிறது.

இந்த இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறிய ஒரு விடயத்தை நினைவில்கொள்வது பொருத்தமாக இருக்கும். “புதிய அரசியலமைப்பு ஊடாக எட்டப்படுகின்ற அரசியல் தீர்வானது நாட்டில் சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார். அவரது கூற்றுக்கு அமைவாக இந்த இடைக்கால அறிக்கை அமைந்திருப்பதை எமது மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இதனால்தான் யாழ். பல்கலைக்கழக சமூகம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த இடைக்கால அறிக்கையை ஏற்க முடியாதென அறிவித்திருந்தன.

வடக்கு மாகாண முதலமைச்சரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். ஆகவே இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பது கிராமங்களுக்கான அபிவிருத்தி என்ற போர்வையில் கபடத்தனமான ஒரு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிலும் தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான செயற்திட்டத்திற்கு எம்மிடமே ஆணைகோரும் செயல் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது எமது கைகளைக் கொண்டே எமது கண்களை குத்தி குருடாக்கிக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அவதானமாகவும நிதானமாகவும் எமது எதிர்கால சந்ததிகளின் நலன் கருதியும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

இனவிடுதலைக்கான போராட்டம் வடக்குக் கிழக்கில் உக்கிரம் பெற்றிருந்த வேளைகளில் அதனை ஏளனம் செய்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிட்டு மேற்கொள்கின்ற நிகழ்ச்சி நிரலுக்காக வாக்கு கேட்டு களமிறங்கியுள்ளனர்.

எமது மக்கள் சொந்த பந்தங்களையும், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், மதிப்புமிக்கவர்கள் என்ற எண்ணங்களை ஒருபுரம் ஒதுக்கிவைத்து விட்டு எமது எதிர்கால சந்ததியின் நலன் கருதி தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

அரசியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதற்காகவே நாம் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு