இராணுவத்தினர் வசமுள்ள பருத்தித்துறை நீதிமன்றக் காணியை விடுவிக்குமாறு இளஞ்செழியன் கோரிக்கை!

ஆசிரியர் - Admin
இராணுவத்தினர் வசமுள்ள பருத்தித்துறை நீதிமன்றக் காணியை விடுவிக்குமாறு இளஞ்செழியன் கோரிக்கை!

பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதியிடம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை அவரது சமாதான அறையில் நேரில் சந்தித்த யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். கட்டளைத் தளபதியுடன் யாழ்பாணம் நகரத் தளபதி பிரிகேடியர் சரத் திசாநாயக்கவும் இராணுவ சட்ட ஆலோசகரும் வருகை தந்திருந்தனர். அவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிய மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற காணியை விடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். இந்தச் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.

பருத்தித்துறையில் 2.10 ஏக்கர் நிலப்பரப்புடைய காணி நீதிமன்றுக்கு உள்ளது. அந்தக் காணியில் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்திருந்தது. அதனை போர்க்காலத்தில் எடுத்துக்கொண்ட இராணுவத்தினர், அங்கு 551ஆவது படைத்தளத்தை அமைத்துக்கொண்டனர். அதனை படையினர் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை சட்டத்தரணிகள் என்னிடம் கோரியுள்ளனர்.

அந்தக் காணி விடுவிக்கப்படுமானால் பருத்தித்துறையிலும் மாகாண மேல் நீதிமன்றம் ஒன்றை அமைக்க வழிவகுக்கும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ். தளபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். நீதிபதியின் கருத்தை செவிமடுத்த யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, தன்னால் முடிந்தளவு உரிய நடவடிக்கைகளை எடுத்து நீதிமன்றக் காணியை விடுவிப்பதாக நீதிபதியிடம் உறுதியளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு