காஷ்மீருக்கு மற்றுமொரு தற்கொலைப்படை தாக்குதல் எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
காஷ்மீருக்கு மற்றுமொரு தற்கொலைப்படை தாக்குதல் எச்சரிக்கை!

காஷ்மீரில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. 

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ வெளியிட்டுள்ள குரல் ஒலிப்பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த குரல்பதிவில், “நீங்கள் காஷ்மீரில் இருக்கும்வரை தொடர்ந்தும் அழுகுரல் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.

உங்கள் இராணுவம் இங்கு இருக்கும்வரை வீர சவப்பெட்டிகள் நிரம்பிக்கொண்டேதான் இருக்கும். உங்களை வாழ விடமாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம். சரணடைவதைவிட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம்.

எங்களின் 15 வயது சிறுவன்கூட தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறி உங்கள் வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடிமைத்தனத்தைவிட இறப்பதே மேல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 14ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் இருதரப்பிற்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்று வருகின்றது. காஷ்மீரில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு படை தயாராக இருப்பதாக லெப்டினட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு