SuperTopAds

யாழில். வெதுப்பகம் மற்றும் உணவகத்திற்கு 70 ஆயிரம் தண்டம்

ஆசிரியர் - Editor II
யாழில். வெதுப்பகம் மற்றும் உணவகத்திற்கு 70 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பவற்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெதுப்பகச் சுற்றாடலில் இலையான்கள் பெருக இடமளித்தமை, அழுகலடைந்த உருளைக்கிழங்குகளை உணவு தயாரிப்பிற்கு களஞ்சியப்படுத்தியமை, வெதுப்பகப் பொருட்களுடன் தொற்று ஏற்படும் வண்ணம் இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். 

குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

அதேவேளை மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை,சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருட்களை தொற்று ஏற்படும் வண்ணம் களஞ்சியப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் உணவக உரிமையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று,  20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது