சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கைத் தமிழ் அகதியின் விவகாரம்! மனைவி எடுத்த திடீர் முடிவு

ஆசிரியர் - Editor II
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கைத் தமிழ் அகதியின் விவகாரம்! மனைவி எடுத்த திடீர் முடிவு

>யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கதிர்வேலு தயாபரராஜ் நபர் தலைமறைவாகி உள்ளார் என மண்டபம் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் அவரது மனைவி உதயகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் குறித்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எனது கணவர் தயாபரராஜ் (36). இவரை அகதிகள் முகாமில் பொலிஸார் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. கணவரை ஆஜர்ப்படுத்த கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

முகாமை விட்டுவெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளான எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர், “தற்போதைய நிலை குறித்து மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு துணைகலெக்டர், இராமநாதபுரம் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜனவரி,18இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கதிர்வேலு தயாபரராஜை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருந்த நிலையில், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார் என தமிழ் நாடு மண்டபம் ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இலங்கை - காரைநகர், வாரிவளவை பிறப்பிடமாக கொண்ட கதிர்வேலு தயாபரராஜ் என்ற குறித்த நபர் யாழ்.சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட உதயகலா என்ற போராளியை விரும்பி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபரராஜ் அவரது மனைவி உதயகலா மற்றும் அவர்களது 3 குழந்தைகள் அகதிகளாக சென்றுள்ளனர்.

இவர்கள் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் இலங்கையில் பலரிடம் பண மோசடி செய்துள்ளதாகவும், சாவகச்சேரி நீதிமன்றில் பாதிக்கப்பட்டவர்களால் வழக்கு தொடரப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிடியாணை உத்தரவு இந்தியத் தூதரகத்தின் மூலம் தமிழக பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த பிடியாணையுடன் அகதி முகாமில் உள்ள தயாபரராஜ் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர். தயாபரராஜ் அங்கு இல்லாத நிலையில் அவரது மனைவி உதயகலாவிடம் பிடியாணையினை பொலிஸார் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதனை வாங்க மறுத்த அவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவரது வீட்டில் பிடியாணையை ஒட்ட முயன்ற பொலிஸாரிடமும், இதனை பதிவு செய்ய சென்ற தனியார் புகைப்படக்காரரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன் பின் கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் அந்த பிடியாணையை பொலிஸார் உதயகலாவின் வீட்டில் ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தனது கணவரை அகதிகள் முகாமில் பொலிஸார் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர் என்ற புதிய தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு