யாழில் வேள்விக்குத் தடை; தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு!

ஆசிரியர் - Editor II
யாழில் வேள்விக்குத் தடை; தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு!

ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த யாழ் மேல் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி, குறித்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

'யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்' எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு கடந்த ஒக்டோபர் இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

"இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், எனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது" என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியுமே மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு