த.தே.கூட்டமைப்பை பற்றி மக்களுக்கு தெரியும்- பா.உ.சிறீதரன்

ஆசிரியர் - Editor II
த.தே.கூட்டமைப்பை பற்றி மக்களுக்கு தெரியும்- பா.உ.சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பல தடவைகள் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். ஆனாலும் அவ்வாறு அவர்களால் வழங்கப்பட்ட ஆணைகள் எதுவும் த்.தே.கூட்டமைப்பினால் இதுவரையும் நிறைவேற்றப்படவில்லை எனபதனை நான் ஒத்துக்கொள்கின்றேன்.எனினும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் த.தே. கூட்டமைப்பையே தெரிவுசெய்து வருகின்றன்றார்கள்!

2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல், 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தல், 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைத்தேர்தல்,

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தமை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் இவ்வாறு பல தேர்தல்களில் எமது கோரிக்கைகளை ஏற்று பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அரசியல் தீர்வை அடைந்துவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு எங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

எங்கள் மீது மக்கள் விமர்சனங்களை வைத்தாலும் பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எம்மை பற்றி தெரியும். 2015ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரைக்கும் உள்ளூராட்சிமன்ற சபைகள் இயங்கிக் கொண்டே இருந்தன.

வீதி அபிவிருத்திக்குச் சொந்தமான வீதிகள், கமநலசேவை நிலையத்திற்குச் சொந்தமான வீதிகள், விவசாய திணைக்களத்திற்குச் சொந்தமான வீதிகள், இவற்றையெல்லாம் விட உள்ளூராட்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான 2000 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளை புனரமைப்பதை விட அவற்றை சீர் செய்வதற்கு 2000 ஆயிரம் மில்லியனுக்கு மேலான நிதி தேவை. கிளிநொச்சி இன்று வரை நகர அமைப்பை கொண்டிருக்கவில்லை.

கடந்தகாலங்களில் காட்டாட்சி நடத்தியவர்கள், இதற்கு தடையாக இருந்திருக்கின்றார்கள். அதாவது நகரத்திட்டமிடலுக்கு அமைவாக கட்டுமானங்களை அமைக்காது நினைத்தபாட்டில் அவற்றை அமைத்திருக்கின்றார்கள்.

இப்போது பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு பெயர் பலகைகளோ அல்லது படங்களோ, விளம்பரங்களோ செய்து அவற்றை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

மக்களுக்காக செய்யவேண்டிய அபிவிருத்திகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை சரியாக முன்னெடுத்து வரும் அதேவேளை தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை நோக்கியும் நாங்கள் பயணிக்க வேண்டியிருக்கின்றது.

வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலானது எங்களது உரிமைக்கான ஒரு தேர்தலாக பார்க்கப்படுகின்ற அதேநேரம் மக்கள் பிரதிநிதிகளுடன் கூடிய ஒரு அபிவிருத்திக்கான களமாகவும் அமைகின்றது.

என்னவெனிலும் எமது மக்கள்சரியான புரிந்துணர்வை அடையும் வரைக்கும் எமக்கே தங்களது ஓட்டுக்களை போட்டு அனுப்புவார்கள் என்றே நாம் இப்போதும் நம்பியிருக்கின்றோம்!

மக்கள் இந்த தேர்தலிலும் தங்கள் ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோரிடத்திலும் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு