சிறீதரன்- சுரேன் ராகவன் சந்திப்பு, குடாநாட்டின் நீா் தேவை குறித்து சிறீதரன் கூறிய ஆலோசனை..
யாழ்.குடாநாட்டுக்கான குடிநீா் திட்டத்திற்காக ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக கு டாநாட்டு மக்களின் நீா் தேவையை பூா்த்தி செய்யலாம். என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சி றீதரன், இதன் ஊடாக கிளிநொச்சி விவசாயிகள் பிரச்சினைக்கும் தீா்வு காணலாம் என்றாா்.
இன்றைய தினம் மாலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்திற்குச் சென்று மா லை 6.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை சந்தித்து கலந்துரையாடினாா்.
அதன் பின்னர் இச்சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண ஆளுநர் அவர்களுடனான சந்திப்பு மிகவும் பயனுடையதாக அமையும் என நம்புகின்றேன்,
அவருடன் வடமாகாணத்தின் பல பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக குறிஞ்சாத்தீவு உப்பளத்தை உடனடியாக இயக்குதல் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இருந்த இடத்தில் கைத்தொழிற்பேட்டை மையமொன்றை அமைத்தல்,
வட்டக்கச்சி அரசினர் விவசாயப் பண்ணை, விவசாயப் பாடசாலை போன்றவற்றை மீளவும் இயக்கி வேலையற்றிருக்கும் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குதல். மற்றும் இரணை மடுக்குளம் தொடர்பில் ஆளுநரை மேற்கோள்காட்டி சில ஊடகங்களில் வெளிவந்த
தவறான கருத்துக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி அவரிடம் கேட்டபோது, தான் அவ்வாறான கருத்தினை வெளியிடவில்லை எனவும் சில ஊடகங்கள் அப்படியான தவறான கருத்தினை வெளியிட்டிருக்கலாம் எனவும் அவரால் கூறப்பட்டது.
ஆளுநர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார், இரணைமடுக்குளத்தை நம்பியுள்ள விவசாயிகள் தொடர்பில் தான் எவ்விதமான பாதகமான முடிவுகளையோ நடவடிக்கையையோ எடுக்கமாட்டேன் என்று. அதே நேரம் நான் அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன்.
அதாவது பாலியாறு ஊடாகக் கடலுக்குள் சென்றுகொண்டிருக்கும் நீரை குடிநீராக மாற்றுவது தொடர்பான பாரிய திட்டம் தற்போது ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான குடிநீரை வழங்க முடியும் என்பதையும்
மற்றும் பூநகரி மண்டைக்கல்லாறு ஊடாக கடலுக்குள் செல்லும் நீரை எவ்வாறு குடிநீர்த்திட்டமாக மாற்றுவது என்பதற்கான திட்டத்தைக் கையாளுதல். மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஏனைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைத்து அதனை விவசாயத்திற்குப் பயன்பட வைத்தல்
அதனூடாக குடிநீர்த்திட்டங்களை முன்னெடுத்தல். இரணைமடுக்குளத்தை நம்பி செய்கை பண்ணப்படும் நெற்செய்கை மூலம் கிடைக்கும் அரிசி யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல வடமாகாண மக்களுக்குமான அரிசித் தேவையை நிவர்த்தி செய்கின்றது.
இதன் மூலம் எமது சுயபொருளாதாரம் கட்டிக் காக்கப்படுகின்றது. இரணைமடுக் குளம் தொடர்பில் நாம் குறுகிய வட்டத்திற்குள் நின்று சிந்திக்க முடியாது. கிளிநொச்சியிலுள்ள இரணைமடுக்குளத்தை நம்பித்தான் இங்கு ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்தும்
ஏனைய பகுதிகளிலிருந்தும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இக்குளத்தை நம்பி வாழும் மக்களைக் கருத்திற்கொள்ளாது இரணைமடுக்குளத்து நீர் தொடர்பில் எவ்வித முடிவுகளும் எடுக்க முடியாது. யாழ்ப்பாண மாவட்ட மக்களின் நன்நீர்த்தேவையை நிவர்த்தி செய்வதற்காக
ஏற்கனவே ஆராயப்பட்டு இன்னும் செயற்படுத்தப்படாமலுள்ள ஆறுமுகம் திட்டத்தை பாரிய அளவில் முன்னெடுப்பதனூடாக யாழ்ப்பாண மக்களுக்கான நன்நீர் வலயம் ஒன்றினை ஏற்படுத்த முடியும். இதனூடாக அம்மக்கள் பெரிதும் பயனடைவர்.
அதனை நடைமுறைப்படுத்த தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்னால் கூறப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார் என்றார்.