ஏமாற்று வித்தை அரசியல் வாதிகளை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும் ; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

ஆசிரியர் - Admin
ஏமாற்று வித்தை அரசியல் வாதிகளை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும் ; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

அரசின் தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு தமிழ் தரப்புக்கள் துணை போகின்றன. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தரப்புக்களுடன் பேரம் பேசி மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ந.இன்பநாயகம் வலியுறுத்தியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை கேட்க அரசியல் கட்சிகள் முனைவது தொடர்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

வலி. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதனூடாக கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த கலந்துரையாடலின் போது, பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எவ்வாறு பொது மக்கள் செயற்பட வேண்டுமென்று கூற வேண்டிய கடப்பாடு உள்ளது.

தமிழ் தலைமைகள் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில், மீண்டும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் ஊடாக மக்களைச் சந்திக்கவுள்ளனர்.

பொது மக்கள் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில், பொது மக்கள் சார்ந்த நிலைப்பாடுகளை அரசியல் தலைவர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக பொறுப்பு வாய்ந்து செயற்படுகின்றவர்கள், கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் தான் மீண்டும் மக்களைச் சந்திக்கவுள்ளனர்.

யுத்தம் முடிந்து இன்றைக்கு 8 ஆண்டுகள் கடந்த போதிலும், மக்கள் எதிர்நோக்குகின்ற மீள்குடியேற்றம் மற்றும் காணி உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்து தீர்வு காண முடியாதவர்களாக உள்ளனர்.

மக்கள் தாமாக பல போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் பல காணிகள் விடுவிக்கப்படாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

அரசாங்கத்தின் சூழ்ச்சிகரமான தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு எமது பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைமைகளும் துணைபோகின்றார்கள் என்பதே உண்மை.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காத நிலையில், தேர்தலைச் சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தலின் மூலம் அரசியல்வாதிகள் மக்களுக்குச் சொல்லப் போகின்ற விடயம். உங்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றோம் எமக்கு வாக்களியுங்கள் என்பதே.

அந்தவகையில், தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கவரும் அரசியல்வாதிகளிடம் பொது மக்கள் தீர்க்கமான முடிவுகளை வலியுறுத்த வேண்டும். நலன்புரி நிலையங்களில் மக்கள் பொருளாதார வறுமையுடன் பல துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் இலாபம் கருதிய அடிப்படையிலேயே அம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளின் இவ்வாறான ஏமாற்று வித்தைகளை மக்கள் இணங்கண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். நடைபெறப் போகும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அரசியல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட தேர்தலாக இருந்தாலும் கூட, மக்களுக்குப் பலம் வாய்ந்த தேர்தலாக பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடைபெறப்போகும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசியல் தலைமைகளுடன் பேரம் பேச வேண்டுமென்பதுடன், தமது தீர்க்கமான முடிவுகளையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு