யாழில் மக்களின் வீடுகளை அழித்து அந்த எச்சங்கள் மீது விருந்தினர் விடுதிகள்

ஆசிரியர் - Editor II
யாழில் மக்களின் வீடுகளை அழித்து அந்த எச்சங்கள் மீது விருந்தினர் விடுதிகள்

வலிகாமம் வடக்கில் மீள்குடியமர்வுகள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை என காங்கேசன்துறையைச் சேர்ந்த 3 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய மீள்குடியமர்வுச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணபிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்.

எமது வீடுகளை அழித்து அதன் எச்சங்கள் மீது விருந்தினர் விடுதி அமைத்து வருமானம் பெறுகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிள்ளை மனோகரன்,

1990 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக நாம் காங்கேசன்துறையில் இருந்து இடம்பெயர்ந்தோம். 2018ஆம் ஆண்டுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எமது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியவில்லை.

படைத்தரப்பினர் எமது நிலங்களை தேவையின் நிமித்தம் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லை. எங்கள் பிரதேசங்கள் பற்றைக்காடாகவே காணப்படுகின்றன.

காங்கேசன்துறை, மயிலிட்டி, ஊரெழு, பலாலி, தையிட்டி போன்ற பிரதேசங்களில் இருந்த எங்கள் வீடுகள் 2014ஆம் ஆண்டே இடித்தழிக்கப்பட்டன. போர் முடிந்த பின்னரே இது நடந்தது.

காங்கேசன்துறையில் தல்செவன என்ற விருந்தினர் விடுதியை உருவாக்கியுள்ளனர். அங்கு ஆரம்பத்தில் சிறிய விருந்தினர் விடுதியே இருந்தது. எங்கள் வீடுகளை இடித்து அதன் எச்சங்களைக் கொண்டு சென்று கடலை நிரப்பி அதன்மேல் மிகப் பெரிய விருந்தினர் விடுதியை உருவாக்கியுள்ளனர்.

நாங்கள் அரச காணிகளைக் கேட்கவில்லை. எங்கள் காணிகளையே கேட்கின்றோம். தமிழர்களின் சேமிப்பு வீடு, காணி என்றே இருக்கும். அவர்கள் உழைக்கும்போது ஏனைய தேவைகளைக் குறைத்து மீதப்படுத்தி, சிரமப்பட்டு வீடுகளை அமைக்கின்றனர்.

வலிகாமம் வடக்கில் வாழ்ந்த மக்களும் அவ்வாறே அழகிய வீடுகளை அமைத்து வாழ்ந்தார்கள். அவை இப்போது இடித்தழிக்கப்பட்டுள்ளன. மீள்குடியமர்வின்போது வீடமைப்புக்காக வழங்கப்படும் நிதி அத்திவாரம் அமைப்பதற்கு கூட காணாதுள்ளது.

வீடமைப்புக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும். இந்த விடயத்தை எமது மக்கள் பிரதிநிதிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஜனாதிபதி எஞ்சிய இடங்களில் மீள்குடியமர்வுகள் விரைவில் நடக்கும் என்றார். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. மீள்குடியமர்வைத் துரிதப்படுத்த வேண்டும். எங்கள் பூர்வீக இடங்களில் எம்மை வாழ விடுங்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு