உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்!
நடைபெறப்போவது உள்ளூராட்சித் தேர்தல். அபிவிருத்தி பற்றித்தான் இங்கு பேசவேண்டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்றியோ, கூட்டாட்சித் தீர்வு பற்றியோ பேசவேண்டிய தேவைகள் இல்லை. எங்கு எதனைப் பேசுவது என்று தெரியாமல் நிற்கின்றார்கள் என்று ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அனைத்துக் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் எதிராளியாகப் பார்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்குப் பலர் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றார்கள். தென்னிலங்கை கட்சிகளை விமர்சிப்பது குறைவாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான், தனது இனம் சார்ந்த பிரச்சினைகளை முன்கொண்டு செல்லும் கட்சியாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரையும் விமர்சிப்பது இல்லை. இதனால்தான் எங்கள் மீது விமர்சனங்களை அதிகமாக இருக்கின்றன. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறி விழும். புதிய அரசமைப்பில் எங்களுக்கு என்ன தேவை என்பதை, இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் நாங்கள் தெளிவாகவே கூறிவிட்டோம்.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்யதது பன்னாட்டுச் சமூகம். சர்வாதிகாரமாகச் செயற்பட்ட மகிந்தவை மாற்றியமைத்தது பன்னாட்டுச் சமூகம். அந்தப் பன்னாட்டுச் சமூகத்திடம் நாங்கள் சில விடயங்களைக் கேட்பதாயின் புதிய அரசமைப்பை நாங்கள் குழப்பாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்காதபோது தான் நாம் பன்னாட்டுச் சமூகத்திடம் கேள்வி கேட்கமுடியும்.
தமிழ் மக்களின் வேணவாக்களைக் கூட்டமைப்பு எந்த இடத்திலும் அடமானம் வைத்துச் செயற்படவில்லை. நாங்கள் ஒரு சில இடங்களில் அரசுடன் இணக்கத்துடன் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக அரசின் அடிவருடிகளாக இருக்கவில்லை. இணங்கிச் செயற்பட்டதால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்றது.
ஒற்றுமையின் பலத்தை நாங்கள் காண்பிக்க வேண்டிய இந்தத் தருணத்தில், எங்களைத் தோற்கடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு பலர் செயற்படுகின்றார்கள். சம்பந்தன் ஐயாவைப் பலர் விமர்சிக்கின்றார்கள். ஐயாவை விமர்சிப்பவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதற்காக எவருடனும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவர் அவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் இது தெரியும்.
சம்பந்தன் ஐயாவின் காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம். என்னுடைய காலத்தில் எதையாவது பெற்றுக்கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கின்ற தலைவர் அல்லர் சம்பந்தன். நியாயமான தீர்வுக்காக அவர் போராடுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சரியான பாதையில்தான் செல்கின்றது. உண்மை வெல்லும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் கூறிய ஆணையை நிறைவேற்றும்போது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தொடர்பாக இருந்த விமர்சனங்கள் அகன்று மக்கள் கூட்டமைப்பை விளங்கிக் கொள்வார்கள் என்றார்.