றெக்ஸியன் கொலைக்கு காரணமானவா் என ஈ.பி.டி.பியில் இருந்து துரத்தப்பட்டவா் மீண்டும் ஈ.பி.டி.பியில்..
ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் போல் என்று அழைக்கப்படும் சின்னையா சிவராசா ஈ.பி.டி.பி யின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்த கமல் என்று அழைக்கப்படும் கமலேந்தி னும் மீண்டும் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நீண்ட கலந்துரையாடல் கூட்டமாக நடைபெற்றதுடன் கட்சியில்
இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைந்து குறித்த கூட்டத்தில் பங்கேற்றதை காண முடிந்தது. குறிப்பாக வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் போல் என்று அழைக்கப்படும் சின்னையா சிவராசா ஈபிடிபியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்த கமல் என்று அழைக்கப்படும் கமலேந்திரனும் பங்கு பற்றி இருந்தனர்.
மேற்குறித்த இருவரும் கடந்த காலங்களில் ஈபிடிபி கட்சியில் முக்கிய உறுப்பினர்களாக இருந்து குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விலக்கப்பட்டிருந்தனர். எனினும் இவ்வாறு விலகியவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஙிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கடந்த காலம் செயற்பட்டனர்.
இவர்களில் கமலேந்திரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட நெடுந்தீவு தவிசாளர் ரெக்சியனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என குற்றஞ்சுமத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் தற்போது வரை உள்ளார். அத்துடன் கடந்த காலத்தில் ஈபிடிபியில் இருந்து நீண்ட காலம் விலகி இருந்த முன்னாள் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசாவும்
கட்சியுடன் மீள இணைந்து செயற்பட்டு வருகின்றார்.இவரும் குறித்த கட்சியின் கொழும்பில் உள்ள கட்டடம் ஒன்றினை விற்கும் நிலையில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் டக்லஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறி இருந்து மீண்டும் இணைந்து கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் குறித்த கட்சி வளர்ந்து வரும் நிலையில் கொலையாளி மற்றும் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டவர்களை மீண்டும் உள்வாங்கி இருப்பதனை கட்சியின் பின்னடைவாக அதன் ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.