படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் கவனத்தில் எடுக்கவேண்டும்!

ஆசிரியர் - Admin
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் கவனத்தில் எடுக்கவேண்டும்!

மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி மூன்று வருடங்கள் கடந்தும், படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சகோதர ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி நிலை நாட்டப்படாதது குறித்து வட மாகாண ஊடகவியலாளர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்படட விசேட செயலணி, வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிராந்திய ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்தார்.

பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்ட போது இதற்கு முன்னர் பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஊடகவியலாளர்களின் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க விசேட செயலணியொன்றை அமைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த செயலணிக்காக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்ததுடன் இந்த செயலணி மூன்று மாதத்திற்குள் அறிக்கையொன்றை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மைத்திரிபால உத்தரவிட்டார்.

இதன்போது கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 40 தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்படாதது குறித்து, வட மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் கந்தசாமி செல்வகுமார் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதும் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மற்றும் அநாதரவாக இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்ததாக சந்திப்பின் பின்னர் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் ஊடகவியலாளர் கந்தசாமி செல்வகுமார் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிவரும் தொழில் சார் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலான சிக்கல்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தொழில்ரீதியான பிரச்சனைகளுக்கு மேலதிகமாக பிராந்திய ஊடகவியலாளர்கள் கடுமையான அழுத்தங்களுக்கும் ஆளாகி வருவதாக சந்திப்பில் கலந்துகொண்ட தொழில்சார் ஊடகவியலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி ஊடகத்திடம் தெரிவித்தார்.

அரச அனுசரணையுடன் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் இதில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததாகவும் லங்கபேலி குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு