தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவனை வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார் ஆளுனர்!

ஆசிரியர் - Editor II
தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவனை வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார் ஆளுனர்!

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பருத்தித்துறை புற்றளையில் அமைந்துள்ள மாணவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்தியுள்ளார்.


இன்று முற்பகல் 10.45 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற ஆளுநர் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஆளுநர், 
தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்கும் அவரது குடும்பத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். 
முன்னொரு காலம் கல்வியில் சிறந்து விளங்கிய யாழ். குடாநாடு சிறிது காலம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது.

எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த மாணவன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை மீண்டும் கல்வியில் வடமாகாணம் முன்னேறி வருகின்றது என்ற செய்தியை வெளிகாட்டி நிற்கின்றது. 
இங்கே கல்வியில் முதலிடம் பெறுபவர்கள் பல உயர் பதவிகளை அடைந்து வெளிநாடுகளுக்கு சென்று சேவையாற்றி வருகின்றார்கள்.

மருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் தமிழ் மருத்துவர்களே. ஆனால் அவர்களில் ஒருசிலர் தமது சேவையை தாய் நாட்டிற்கு வழங்குவது கிடையாது. தாம் பிறந்த ஊருக்கு வழங்குவது கிடையாது. வேறு பகுதிகளில் சேவையாற்றுகின்றார்கள். எனவே இந்த மாணவனை போன்று கல்வியில் உயர்நிலை அடைபவர்கள் படித்து மேலே வந்து தமது பெற்றோர்களுக்கும் இந்த நாட்டிற்கும் சேவை ஆற்றவேண்டும் என வேண்டிக்கொள்வாக குறிப்பிட்டார்.

யாழ் குடாநாடு மீண்டும் கல்வியில் உயர்ந்து இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏனைய மாணவர்களும் இவரைபோன்று கல்வியில் அதிகளவில் அக்கறை செலுத்துமாறும் வேண்டிக்கொண்டார். 


இவ்விஜயத்தின்போது ஆளுநருடன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏக்ஸ்.செல்வநாயகம், வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் எஸ். நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு