SuperTopAds

இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..


நிம்மதியாக வாழ்வதற்கு வீடின்றி, பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு வழியின்றி, அன்றாடம் உணவிற்காக கஸ்டப்பட்டு, விறகு வெட்டி அன்றாட வாழ்வினை கழித்து வருகிறோம்.

இப்படி கூறுகிறாா் முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நான்கு பிள்ளைகளின் தந்தை பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன். அவா் தன் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அவல நிலை குறித்து எம்மோடு பகிா்ந்து கொண்டவை,  

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும்,  வருமானங்களின்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றன.

நான்கு பெண் குழந்தைகளின் தந்தையான இவர்கள் யுத்தத்தின் போது ஒரு காலை இழந்த நிலையில், தினமும் காட்டிற்குச்சென்று விறகு வெட்டி அதனை வீதியில் வைத்து விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவர்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடொன்றிலே வாழ்ந்து வருகின்றனர். ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட இக்குடும்பம் வீடு,மின்சார வசதி, மலசலகூட வசதி, குடிநீர் வசதி, போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த குடும்பத்திற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுள்ள பங்கீட்டு அட்டையில் நிரந்தர வீடு, மலசலகூடம் என்பன வழங்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ள போதும், அவை எதுவும், அவர்களிடம் இல்லாத நிலை காணப்படுகின்றது.

புதிய கல்வி ஆண்டில் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலைக்கான உபகரணங்களை வாங்கமுடியாத நிலையில் தாம் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்ற மக்கள் பிரதிநிதிகளே, புலம்பெயர் தேசத்திலிருந்து தமிழர் பிரதேச அபவிருத்திகளுக்காக பணம் அனுப்பும் தனவந்தர்களே, பொது அமைப்புக்களே, அரச சார்பற்ற நிறுவனங்களே,  போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு எமது மண்ணில் இந்தக்குடும்பம் அனுபவிக்கும் அவஸ்தை உங்கள் கவனத்திற்கு.