கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சென்று சந்தித்தனர்.
அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தின் போது அமைச்சின் மேலதிக செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் அனைவரும் அனர்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு முதற்கட்டமாக
பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் பின்னர் வீட்டின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு 2.5 மில்லியன் வரை இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த புதுகுடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் தற்காலிக வீடுகளே.
எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு தீர்மானித்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் அதுவே பொருத்தமானது எனத் தெரிவித்தார்.
இது கொள்கை ரீதியாக தீர்மானிக்க வேண்டும் இதனை பாராளுமன்றத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.