SuperTopAds

ஜனாதிபதியின் பணிப்புக்கமைய நிவாரண பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அழிவுகள் தொடா்பில் ஆராய நாளை விசேட கூட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் பணிப்புக்கமைய நிவாரண பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அழிவுகள் தொடா்பில் ஆராய நாளை விசேட கூட்டம்..

கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் விசேட வழிகாட்டலின் கீழ் வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமையினால் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பிரதேசத்தில் சுமார் 1,394 குடும்பங்களைச் சேர்ந்த 4,649 பேர் அளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் 26 முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பிரதேசத்தில் சுமார் 1,619 குடும்பங்களை சேர்ந்த 4,917 பேர் அளவில் 28 இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சுகாதார வசதிகள், உணவு மற்றும் உலர் உணவு பொருட்கள் ஆகியவை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் தன்னார்வ அமைப்புகளினால் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவம், கப்பற்படை மற்றும் பொலிஸார் இதன்போது விசேட ஒத்துழைப்பை வழங்கி வருவதுடன், விமானப் படையினரும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பணிக்குழுவினரின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், 

ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு நிலைமை நீங்கும் வரை தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சகல வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளைய தினம் (2018.12.24) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் உள்ளிட்ட 

சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த கலந்துரையாடலின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காகவும் நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், 

விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. வெள்ளத்தினால் அசுத்தமடைந்துள்ள வீடுகள், விற்பனை நிலையங்கள், குடிநீர்க் கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வது தொடர்பாக கலந்துரையாடவும் நாளைய தினம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.