கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் வடமாகாணத்தின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. களத்தில் இராணுவம்.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் குளங்க ளின் வான் கதவுகள் திறப்பு, குளங்கள் உடைப்பு ஆகியவற்றினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் வடமாகாணத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. 5 மாவட்டங்களிலும் 13,466 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும், இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி
இரணைமடுக்குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கனகாம்பிக்கைக்குளம், கல்மடு, விசுவமடு குளங்களில் இருந்து அதிக நீர்வெளியேறுகின்றது.
குளங்களில் இருந்து அதிக நீர் வெளியேறுவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புன்னைநீராவி, தர்மபுரம், கண்டாவளை, பன்னங்கண்டி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் முற்றாக மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்குளம், வவுனிக்குளம், உடையார்கட்டுக்குளம் ஆகிய குளங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அந்த குளங்களின் கலிங்கு ஊடாக அதிக நீர் வெளியேறுகின்றது. அங்குள்ள தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வீதிகளின் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,794 குடும்பங்களை சேர்ந்த 12,651 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் 25 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கரிசல் பிரதேசத்தில் வெள்ளத்தால் 27 குடும்பங்களை சேர்ந்த 85 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மீனவர்களின் 11 படகுகள் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ். - போக்கறுப்பு வீதியூடான போக்குவரத்து மருதங்கேணியுடன் துண்டிக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணில் இருந்து போக்குறுப்புக்கான 30 கிலோமீற்றர் தூர வீதியால் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மருதங்கேணியில் வெள்ளத்தால் 273 குடும்பங்களை சேர்ந்த 708 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட செயலர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.