புலிகளுக்கு உதவினாராம் எம்.ஜி.ஆ!! யாழில் ஆப்பு வைத்த யாழ் பொலிசார்!!

ஆசிரியர் - Admin
புலிகளுக்கு உதவினாராம் எம்.ஜி.ஆ!! யாழில் ஆப்பு வைத்த யாழ் பொலிசார்!!

யாழில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் அனைத்துலக எம். ஜி. ஆர் பேரவைத் தலைவர் பொன்மதிமுகராஜாவின் நினைவு கூரலும் மற்றும் சுனாமிப் பேரலையின்

13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் வருடம் தோறும் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவை தலைமை விழா ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் முப்பெரும் விழாவாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வருட இறுதிநாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் திடீரெனக் குறித்த விழா இடம்பெறாது யாழ். பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்புலமாகச் செயற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த வருடமும் குறித்த விழாவுக்கான இரு நாள் நிகழ்வுகளும் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்று முடிவடைந்துள்ள நிலையில் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(26) பிற்பகல்-04.30 மணி முதல் யாழ். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய வீதியில் பிரமாண்டமாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த விழாவுக்கு கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் முன்கூட்டியே யாழ். பொலிஸ் நிலையத்திலும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று காலை முதல் ஏற்பாட்டுக் குழுவினரால் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் விழா ஏற்பாடு நடைபெற்ற பகுதிக்கு இன்று முற்பகல் யாழ்.பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உயரதிகாரி உள்ளிட்ட பத்துப் பேர் கொண்ட பொலிஸ் குழு திடீரென விரைந்துள்ளது. அங்கு விழாவின் பிரதான ஏற்பாட்டாளரான மதிமுகராஜா விஜயகாந்தை அழைத்த பொலிஸார் விழாவை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரிடம் காரணம் கேட்ட போது எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளளுக்குப் பணம் வழங்கி அவர்களை வளர்த்துள்ளது. ஆகவே, இந்த விழாவை நடாத்த வேண்டாம் எனவும், இது தொடர்பில் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விழாவின் பிரதான ஏற்பாட்டாளரான மதிமுகராஜா விஜயகாந்தைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முன்னனுமதி பெறப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய விஜயகாந் ஆலய நிர்வாகமும் விழா நடத்துவதற்கு முன்னர் இணங்கியிருந்ததையும் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதுடன் இது தொடர்பான ஆதாரங்களையும் பொலிஸாருக்குச் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்தை யாழ்.பொலிஸ் நிலையத்திற்குப் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் இரண்டு மணித்தியாலம் தடுத்து வைக்கப்பட்டு விஜயகாந் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது குறித்த விழா நடாத்தும் திட்ட த்தைக் கைவிடும் படியும் இல்லாவிடில் உம்மைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிவரும் எனவும் மிரட்டும் தொனியில் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் மிரட்டல் காரணமாக முப்பெரும் விழாவுக்கான பிரமாண்டமான மேடை மற்றும் பந்தல் அலங்கார வேலைகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ள நிலையில் விழாவை நடாத்தும் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாக விழாவின் பிரதான ஏற்பாட்டாளரான மதிமுகராஜா விஜயகாந் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இன்றைய முப்பெரும் விழாவுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன், மகளிர் இராஜாங்க விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் உள்ளிட்டோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவிருந்த நிலையில் விழா நிறுத்தப்பட்டமை பெரும் மனவருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய நிர்வாகம் இவ்வருடம் மாற்றமடைந்துள்ள நிலையில் மேற்படி நிர்வாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிப்பவர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களே வருடம் தோறும் சிறப்பாக இடம்பெற்று வரும் முப்பெரும் விழாவை நடைபெறாது தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விழா நடைபெறாது தடுக்கப்பட்டதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செல்வாக்கச் செலுத்தியுள்ளதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டினார். ஈழத் தமிழரின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்ட அரசியல் தலைவர் எம்.ஜி. ஆருக்கு விழா எடுக்காது தடுத்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியம் வெளிப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு