கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினா் வசமிருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு..
கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினாின் கட்டுப்பாட்டிலிருந்த ஒருதொகை நிலம் இன்று இரு மாவட்டங்களினதும் அரச அதிபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த அரச மற்றும் தனியார் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணியே இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள
இராணுவ ஒத்துழைப்பு மையத்தில் வைத்து அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட 39.95 ஏக்கர்
அரச மற்றும் தனியார் காணிக்கான ஆவணங்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட காணிக்கான
ஆவணங்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடமும் இலங்கை பாதுகாப்பு படைகளின் கிளிநொச்சி படைத்தளபதி major General Ralf nugeraவால் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில் கரைச்சி பிரதேச செயலாளர் ரீ.முகுந்தன், கண்டாவளை பிரதேச செயலர் ரீ.பிருந்தாகரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரபாகர மூர்த்தி மற்றும்
இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் அரசாங்க அதிபர்கள் இருவரும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே வட மாகாணத்தில் இந்த காணிகள் விடுவிக்கப்படுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகள் யாருடையது என ஆராய்ந்து
அவர்களை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து வட மாகாண ஆளுநரால் ஆவணங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படும்.
அத்துடன் படையினர் வசமுள்ள மீதி காணிகளை விடுவிப்பதற்கான கோரிக்கை ஒன்றை இதன்போது கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதியிடம் முன்வைத்ததாகவும்,
அவர் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முடிவுகளை எட்டுவதாக உறுதியளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் யுத்தத்திற்கு பின்னர் பகுதி பகுதியாக அரச மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் கடந்த சில காலமாக காணி விடுவிப்பு நடவடிக்கையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய காணித் தொகுதி விடுவிக்கப்பட்டமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.