நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்கவே ஆதரவு, நிபந்தனை எதுவும் இல்லையாம்.. எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறாா்..
இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவினை வழங்கியது.
அதற்காக நாங்கள் எழுத்துமூல நிபந்தனை எதையும் கோரவில்லை எனவும், அவ்வாறு அவா் தந்திருந்தால் கூட நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம்.
மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியு ள்ளாா்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக – காப்பதற்காக மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு கொடுக்க முன்வந்தோம். அதில் வேறு விடயங்கள் இல்லை. அது குறித்து ஏலவே நாங்கள் விரிவாக எமது மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ஷ தரப்பை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயகத்தை மீட்பதற்காகவே இந்த நாடாளுமன்ற நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம். வேறு காரணங்கள் ஏதுமில்லை.
ஆனால், ரணிலுக்கு தமிழ் மக்கள் உடனடிப் பிரச்சினைகள், நெருக்கடிகள், நீண்டகால அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு ஆகியவை குறித்தெல்லாம் ஆழ்ந்த கரிசனை உண்டு என்பது எமக்கு நன்கு தெரியும்.
செய்யக் கூடியவற்றை அவர் செய்வார் என்று நாங்கள் நம்பலாம். நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம். நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் விடயத்தில் சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள் உறுதியாகவும்,
கரிசனையோடும், பிரக்ஞையுடனும் உள்ளன. அதன் வெளிப்பாடே நேற்றுப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம்” – என்றார்.