வடமாகாணசபை ஒன்றும் செய்யவில்லையாம்..! ஆளுநரிடம் உதவி கேட்டுவந்த வவுனியா தமிழ் பிரதேசசபை..
வவுனியா தமிழ் பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
வவுனியா தமிழ் பிரதேசசபையின் தவிசாளராக தாம் நியமிக்கப்பட்ட காலம் முதல் பிரதேசபையின் பல தேவைகள் தொடர்பில் கோரிக்கைகள் பலவற்றினை முன்வைத்து கடிதம் எழுதிய போதும் இதுவரை அவை நிறைவு செய்யப்படவில்லை என சபையின் தவிசாளர் ரி.நடராஜசிங்கம் ஆளுநரிடம் தெரிவித்தார்.
தற்போது தங்களின் கரங்களில் அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் இதனை நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக எமது சபைக்கு பைக்கோ இயந்திரம் ஒன்று தேவையாக இருக்கின்றது. எமது சபைக்கு சொந்தமான கட்டிடங்கள் அமைந்துள்ள காணிகளுக்கு உரிமங்கள் எதுவுமே இல்லை
விளையாட்டு மைதானம் ஆயுள்வேத வைத்தியசாலைகள் அமைந்தள்ள காணிகளுக்கும் உரிமம் கிடைக்கவில்லை இவைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதியும் கூட முடிவுகள் இல்லை என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஆளுநர் கடந்த காலத்தில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு யார் காரணம்? உள்ளுராட்சி அமைச்சின் அமைச்சர்மாதிரி ஐந்து வருடம் யார் இருந்தது? முதலமைச்சர் ஐயா!
அந்த கடந்த காலக் கதையை விடுவம் நீங்கள் மூன்று பிரச்சினைகளை என்னிடம் சொல்லி இருக்கின்றீர்கள். அதில் முதலாவதாக சொன்ன பைக்கோ இயந்திரம் கொள்வனவு செய்வதற்கான அனுமதியினை உடனடியாக வழங்குகின்றேன். ஆனால் அது பயன்படுத்தப்படும் விதம் அதனால் சபை அடையும் இலாபம் அது கொள்வனவு செய்யப்படும் விதம் உள்ளிட்டவை அடங்கிய விபரமான அறிக்கையினை
எனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதேசசபைக்கு சொந்தமான காணிகளுக்கான உரிமம் தொடர்பான விடயங்;களுக்கு பிரதேச செயலர் மற்றும் காணி ஆணையாளர்கள் அழைத்து ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டு விரைவாக தீர்வினை பெற்றுத் தருவேன் என உறுதியழித்தார்.
ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் வவுனியா தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் ரி.நடராஜசிங்கம் பிரதித்தலைவர் வி.மகேந்திரன் சபையின் செயலாளர் திருமதி எஸ்.கிசோர் உள்ளுராட்சி ஆணையாளர்
எம்.பற்றிக்றஞ்சன் உதவி ஆணையாளர் பி.எம்.ஏ.கே குமார முதலமைச்சர் அமைச்சின் பதில் செயலர் எஸ்.மோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.