SuperTopAds

36 அடி தண்ணீரை சேகாிக்கப்படாமல் இரணைமடு குளம் திறக்கப்படாது, விவசாயிகள் உறுதி..

ஆசிரியர் - Editor I
36 அடி தண்ணீரை சேகாிக்கப்படாமல் இரணைமடு குளம் திறக்கப்படாது, விவசாயிகள் உறுதி..

இரணைமடுக்குளத்திற்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவு செய்து விவசாயிகளை நம்பவைத்து சிலரின் தேவைக்காக மோசடியாக நீரை கடலிற்குள் செலுத்தும் முயற்சி  இடம்பெற்ற நிலையில்  ஆளுநருடன்பேசி இணக்கத்தினை எட்டினோம்  என இரணைமடு விவசாய சம்மேளனச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இரணைமடு விவசாய சம்மேளனச் செயலாளர் மு.சிவமோகன் மேலும் விபரம்  தெரிவிக்கையில் ,

இரணைமடுக் குளமானது ஏற்கனவே 34 அடி கொள் அளவில் இருந்தது. இதனை அதிகரித்து தருமாறு இந்த மாவட்ட மக்கள்  நீண்டகாலம் விடுத்த கோரிக்கையின் பயனாக 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் குளத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றன. 

இதன்போது குளத்தின் அலை கரைகளுள் உள்ள பிரதேசங்கள் மக்கள் குடியிருப்புக்களிலும் நீர் மட்டமும் கணிக்கப்பட்டது. இதன் பின்பே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன. இந்த நிலையில் தற்போதுதான் 35.3 அடி நீர் குளத்தில் தேக்கப்பட்டுள்ளது. இன்னமும் 9 இஞ்சி  நீர் தேக்கப்பட வேண்டும் . 

அந்த  இஞ்சி நீர் என்பது மிகவும் பெறுமதியானது. ஏனெனில் குளத்தின் மேற்பரப்பு மிகவும் விசாளமானது. இந்தக் காலத்தில் நேற்றுமாலை அதாவது 4ம் திகதி மாலை முதல் சிலர் குளத்து நீரை அவசரமாக திறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.   ஏனெனில் அவ்வாறு அவசரமாக குளம் திறக்கப்பட்டே ஆக வேண்டும் என்றால் 2 ஆயிரம் மில்லியன் பணம் 

ஏன் வீணாக மண்ணில் போடப்பட்டது. என்பதற்கு எமக்கு ஒவ்வொருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்பதனை நாம் அவசரமாக நீர்ப்பாசனத் திணைக்களம் , மாவட்டச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம் . இந்த நிலையில்  நேற்று இக் குளத்தினை பார்வையிட  வடக்கு மாகாண ஆளுநர் வருகை தந்தார்.

வருகை தந்த ஆளுநர்  எமது நிலை அறிந்து  சிலரின் தேவைக்காக குளத்தை திறக்கவில்லை.  விவசாயிகளின் விபரீத முடிவிற்கு அளுநரும் பதில்கூறும் நிலமையே ஏற்படும் என கருதினோம் . இந்த நிலமையில்  குளமானது 36 அடியை தொட்ட பின்பு வான் கதவுகளை திறப்பதற்கு விவசாயிகள் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. 

அதன்போது எவர் வேண்டுமானாலும் திறவுங்கள் அப்போது விவசாயிகளின் பூரண ஒத்துழைப்பும் கிட்டும். எனத் தெரிவித்த எம் கோரிக்கையை ஏற்ற ஆளுநர் குளத்தை பார்வையிட்டுச் சென்றார். இதேநேரம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் முதலில் வருகை தந்து குளத்தினை பார்வையிட்டுச் சென்றார். எனத் தெரிவித்தார்.

இவை தொடர்பில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இது தொடர்பில் கேட்டபோது ,மேற்படி விடயம் தொடர்பில் விவசாய சம்மேளனம் தொடர்பு கொண்டு உரையாடினர். எது எவ்வாறாயினும் இரணைமடுக் குளமானது 36 அடியை எட்ட முன்பு எக் காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்கப்படவே மாட்டாது. என்றார். 

இதேநேரம் குறித்த குளம் நேற்று திறக்கப்படும் என சிலர் வதந்தி பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.