கழிவகற்றல் செயன்முறையில் படுதோல்வியடைந்த கரைச்சி பிரதேசசபை.. அசௌகாியத்திற்கு உள்ளாகும் மக்கள்.
“கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்,
நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம் சொல்லியும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை” என்கிறார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர், “ஆனையிறவு பரந்தன் பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது. ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவுகள் எந்தவித பொறுப்பும் இன்றி திறந்த வெளியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் எமது உப்பளத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இச் செயற்பாடு எதிர்காலத்தில் கைத்தொழில் வலயத்திற்கு தடையாகவும் இருக்கலாம்” என்று சுட்டிக் காட்டுகிறார்.
கிளிநொச்சியின் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் இவ்வாறு பலரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே வருகின்றனர். ஆனால் இவை எவற்றையும் கரைச்சி பிரதேச சபை கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.
மாறாக தங்களின் வழமையான தோல்விகண்ட கழிவகற்றல் முறையினையே மேற்கொண்டு வருகின்றனர். நானும் ரவுடிதான் என்பது போல எங்களது பிரதேச சபையும் குப்பைகளை அகற்றுகிறது என்ற வகையில் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெறுகிறது.
இது குறித்த பிரதேசத்திற்கும் அதன் சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
கிளிநொச்சி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் அனைத்தும் அதாவது தின்மக் கழிவு, திரவக் கழிவு, வைத்தியசாலைகளின் கழிவுகள், என அனைத்தும் உழவு இயந்திரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு
பரந்தன் உமையாள்புரம் பகுதியில் ஏ9 பிரதான வீதியிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது.
இங்கே கழிவகற்றல் முகாமைத்துவம் கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. கழிவகற்றல் முகாமைத்துவத்தின் படி கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பு ஏற்படாத வகையில் மீள்சுழற்சி செய்தல், உருமாற்றுதல், கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளை சுட்டிகாட்டுகின்றன.
ஆனால் கிளிநொச்சியில் அதில் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. கழிவுகளை சேகரித்தல் விடயத்திலும் எல்லா கழிவுகளையும் ஒன்றாகவே சேகரித்து செல்கின்றனர். எனவே இந்த செயற்பாடுகள் தொடர்பிலேயே பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் கழிவுகளை மீள்சுழற்சி செய்கின்ற ஒரு வசதிவாய்ப்பு ஏற்படுகின்ற போது உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கொட்டுகின்ற கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியாத நிலையே ஏற்படும். காரணம் அங்கு பிளாஸ்ரிக், கழிவுகள்,
உடைந்த போத்தல்கள் வைத்தியசாலை கழிவுகள் விலங்கு கழிவுகள் என அனைத்தும் ஒன்றாக குவிக்கப்படுகிறது. அத்தோடு இந்தக் கழிவுகள் அங்கு தேங்கி நிற்கும் மழை நீருடன் சேர்ந்து அழுகிய நிலையில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது சுற்றயலில் மிக மோசனமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கழிவகற்றல் முறையால் நிலம், நீர் என்பன படுமோசனமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்தப் பாதிப்புக்களின் பாதகத்தை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை மாறாக பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதே கழிகவற்றல் பொறிமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மனிதன் குலத்திற்கு மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்துக்கும் சுற்றுச் சூழல் மிக முக்கியமானது. உயிரினங்களிலிருந்து சுற்றுச் சூழலை பிரிக்க முடியாது. சுற்றுச்சூழலின் பாதுகாப்பிலேயே உயிரினங்களின் பாதுகாப்பும் தங்கியிருக்கிறது. அந்த வகையில் நிலம், நீர், வாயு என்பன சுத்தமாக இருக்க வேண்டும்.
இவற்றின் சுத்தம் என்பது மனித நடவடிக்கையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் இங்கே தெரிந்து கொண்டும் பாதிப்பபை ஏற்படுத்துகின்ற கழிவகற்றல் முறை தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. கழிவு முகாமைத்துவம் பற்றியும் உரிய தரப்பினர் அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு.
இதேவேளை பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கழிவகற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றி உள்ளூராட்சி மன்றங்கள் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கழிவு முகாமைத்துவ
செயற்பாடுகளை வீடுகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், தனிநபர்களில் இருந்து ஆரம்பிக்கின்ற இச் செயற்பாடுகள் சமூகமான, பிரதேசமாக மாற்றமடைகின்ற போதே சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்.
பாதுகாப்பான கழிவகற்றலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் என்பது தனிநபர் சாந்த விடயமல்ல அதுவொரு கூட்டுழைப்பு. கூட்டுப்பொறுப்பு.
இந்தக் கூட்டுழைப்பை, கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்த வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களினதும் கடமையாகும். ஆனால் கிளிநொச்சியில் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது கடமைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் அப்பால் அரசியல் இலாபநட்டங்களை கவனத்தில் எடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.
கிளிநொச்சியை பொறுத்தவரை கிளிநொச்சி நகரையும் அதனை அண்டியப் பகுதிகளிலும் கழிவுகள் அகறப்படுகின்றன. இதற்குள் வியாபார நிலையங்களின் கழிவுகள், வைத்தியசாலைக் கழிவுகள் என்பன உள்ளடங்குகின்றன. குறிப்பாக
வைத்தியசாலை கழிவுகள் விடயத்தில் மிகவும் அவதானம் தேவை ஆனால் இங்கே வைத்தியசாலை கழிவுகளும் ஏனைய கழிவுகளுடன் சேர்த்து உமையாள்புரத்தில் கொட்டப்படுகிறது.
இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. மீள் சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்ரிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள், உலோக கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் என எல்லாக் கழிவுகளும் பரந்த வெளியில்
கொட்டப்பட்டு அவ்வாறே விடப்படுகிறது. ஒருபுறம் பறவைகளாலும், விலங்குகளாலும் சுற்றுப்புறச் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. மறுபுறம் வெள்ள நீருடன் கலந்து அடித்துச் செல்லப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளின் மிக முக்கிய பணிகளில் ஒன்று கழிவகற்றல். அதனையே இந்த நவீன யுகத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியாத நிர்வாகங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
எனவே சுற்றுப்புறச் பாதுகாப்பு, மக்களின் சுகாதாரமான வாழ்வு, என்பனவற்றை கருத்தில் எடுத்து தூரநோக்கோடு உள்ளூராட்சி சபைகள் செயற்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.