SuperTopAds

இரணைமடு குளத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு, பாதிப்பு உண்டாகுமா? விவசாயிகள் அச்சம்.

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு, பாதிப்பு உண்டாகுமா? விவசாயிகள் அச்சம்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அருகே உள்ள பிரதானன வீதியில் ஏற்படவுள்ள ஆபத்து தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இரணைமடுக் குளத்தின் இடதுகரை கதவு ஆரம்பிக்கும் பகுதியில் கனகாம்பிகை அம்மன் ஆலயத் திசையில் உள்ள பிரதான வீதியின் குளத் திசையின் கீழ் உள்ள நிலத்தில் பாரிய அரிப்பு ஏற்படுகின்றது. 

தற்போது குளத்தில் நீரானது 33 அடியை தாண்டிவிட்டது. 36 அடியை நெருங்கும்வேளையில் மேலும் நீர் அதிகரித்து மண் அரிப்பு ஏற்படுமானால் வீதியில் விபரீதம் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவே கருதப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் மேற்பார்வை செய்து அதன் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். அல்லது அதனை தடுப்பதற்குரிய வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதே நேரம் இரணைமடு விவசாயிகள் சம்மேளனமும் கவனம் செலுத்த வேண்டும். இதே நேரம் பிரதான துருசு வாய்க்கால் திசையில் கடந்த காலத்தில் மண் அரிப்பு ஏற்படாத வண்ணம் புல் மட்டுமே வளர விடப்படும் ஆனால் தற்போது பிரதான வாய்க்காலே வெளித் தெரியவில்லை.

அவ்வாறு வெளித் தெரியா வண்ணம் காடு சூழ்கின்றது. அதனால் எதிர்காலத்தில் பிரதான வாய்க்கால்கள் பாரிய சேதமடையும். அதேநேரம் அப் பகுதியில் அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஊழியர்களும் ஆபத்தில் சிக்ககூடும்.

எனவே இவற்றை கவனத்துல்கொண்டு உரியவர்கள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பில் இரணைமடு விவசாய சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

பிரதான வாய்க்காலில் ஒரு பகுதி சீமெந்து கொண்டு புனரமைக்கப்பட்ட போதிலும் எஞ்சிய பகுதி பழைய நிலமையிலேயே காணப்படுகின்றது. அதே நேரம் பற்றைகள் வளர்வதனால் விச யந்துக்கள் பெருக்கம் கானப்படும் என அயலில் உள்ள விவசாயிகள் தற்போது சுட்டிக்காட்டுகின்றனர். 

அத்தோடு அங்கே வளரும் மரங்கள் எதிர்காலத்தில் காடாகமாறினால் அதன் பாரிய வேர்கள் வாய்க்காலை சேதமாக்கும் . அதேநேரம் மரம் குறிப்பிட்ட அளவினை மிஞ்சினால் வனவளத் தினைக்களத்தின் அனுமதி என்கின்ற நிலமைக்கும் இட்டுச் செல்லும். 

இதனால் எதிர் வரும் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு குறித்த விடயங்கள் கொண்டு செல்லப்படும் என்றார். மேற்படி விடயங்கள் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய  நீர்ப்பாசன பொறியியலாளர் பரணிதரனைத்  தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குளத்தில் பல வேலைகள் மேற்கொள்ளவேண்டிய நிலமையில் கடந்த இரு ஆண்டுகளும் பாரிய வேலைகள் இடம்பெற்றன . இதேநேரம் கடந்த இரு ஆண்டும் குளத்தில் நீர் நிரம்பாத நிலையில் இவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

 தற்போது நீர் உயரும் சந்தர்ப்பத்திலேயே அவை வெளித்தெரிகின்றது. அதனை ஆராய்ந்து செலவு மதிப்பீடுகள் மேற்கொண்டு உடன் திருத்தப்பணிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.

இருப்பினும் குளத்தில் அதிக தீர் நிற்கும் காலத்தில்  இப்பணியை மேற்கொள்ள முடியாது. அதேநேரம் இவை சிறு திருத்தமாகவும் இடம்பெற முடியாது. 

பெரும் நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் என்பதனாலும் மிகவும் முக்கிய விடயம் என்பதனாலும் தொடர் கண்காணிப்பிற்குள் வைத்துள்ளோம். எனப் பதிலளித்தார்.