வடக்கில் புதிய அரசியல் கூட்டணி அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஆசிரியர் - Admin
வடக்கில் புதிய அரசியல் கூட்டணி அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முன்னணி அவசியம். அதனால், மிக விரைவில் புதிய முன்னணி ஒன்று தோற்றுவிக்கப்படுமென என தமிழர் விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தற்கால அரசியல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக மாற்றுத் தலைமையினை வலியுறுத்தி வந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் மாற்றுத் தலைமையின் அவசியம் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை முழுமையாக கைவிட்டுள்ளார்கள்.

சமஸ்டி மற்றும் வட, கிழக்கு இணைப்பு என்ற விடயங்கள் கைவிடப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சரியான தலைமைத்துவமும், புதிய முன்னணியும் தேவை என அனைவரும் உணர்ந்துள்ளனர்.புதிய முன்னணி தேவை என்பதனை தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் எதேச்சதிகாரப் போக்கில் தான் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கின்றார்கள்.

கூட்டமைப்பிற்குள் விவாதங்கள் நடத்துவதில்லை. ஓரிரு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் திணிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை நிராகரிப்பது மாத்திரமல்ல, இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போன்று ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் தலைவர் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரமாட்டார். என சிங்கள தலைவர்கள் முத்திரை குத்தும் அளவிற்கு சம்பந்தனின் செயற்பாடுகள் உள்ளன.

அந்தவகையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு என்ன நடக்கப்போகின்றது என பாரிய கேள்வி இருக்கின்றது. அரசியல் சாசனம் இன்னும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, சமஸ்டி என்று கூறுவதெல்லாம் போலித்தனமானது. தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய முன்னணி அவசியம். மிக விரைவில் அவ்வாறான அமைப்பு தோற்றுவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு