சுகாதார தொண்டர்கள் 400 பேருக்கு நிரந்தர நியமனம்..
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களிற்கான நிரந்தர நியமனத்திற்காக நீண்ட காலம் மேற்கொண்ட முயற்சியின் பயணாக சுமார் 400 பேர் தேர்வு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நீண்ட காலமாக தொண்டர்களாகப் பணியாற்றும் 590 தொண்டர்களிற்கும் நிரந்நர நியமனம் வழங்கும் வகையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த ப.சத்தியலிங்கத்தின் காலம் முதல் மேற்கொண்ட ஓர் முயற்சி தற்போது ஓர் முடிவினை எட்டியுள்ளது..
அதாவது தற்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நிரந்தர சுகாதாரத் தொண்டர்களை சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் பதவி உயர்விற்கு சிபார்சு செய்யப்பட்டவர்களிற்கான பதவி உயர்வுக்கான அனுமதி கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் இடத்திற்கு புதியவர்களை நியமிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் தற்போது சுமார் 400 பேரை நியமிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
எனினும் பல சுற்று நிரூபங்களை பின்பற்றவேண்டிய நிலமையும் உள்ளது. அதன் பிரகாரம் 30 வீதம் கட்டாயம் ஆண்கள் இருக்க வேண்டும் என்ற ஓர் கடப்பாடும் உண்டு . அதன் அடிப்படையில் சுமார் 100 ஆண்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதனால் சங்கத்தினால் சமர்ப்பித்த பட்டியலில் உள்ள ஆண்கள் அனைவருக்கும் அதிக வாய்ப்புள்ளது.
பெண் தொண்டர்களில் சேவை மூப்பின் அடிப்படையில் தேர்விற்கான ஏற்பாட்டினை செய்யும் அதே நேரம் எஞ்சியவர்களிற்கான சந்தர்ப்பமும் ஆராயப்படுகின்றது. எனத் தெரிவித்தனர்.