போதிய வசதிகளின்றி இரண்டு திறந்த இதய அறுவைச் சிகிச்சைகள்! - யாழ். மருத்துவர்கள் சாதனை

ஆசிரியர் - Admin
போதிய வசதிகளின்றி இரண்டு திறந்த இதய அறுவைச் சிகிச்சைகள்! - யாழ். மருத்துவர்கள் சாதனை

போதிய வசதிகள் இன்றி திறந்த இதய சத்திரசிகிச்சையை யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில், வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் விசுவமடு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கும் திறந்த இதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கையில், “ 

யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்த இருதய சிகிச்சை இரண்டு நாளாக செய்தோம். இந்த சத்திர சிகிச்சையினை வைத்திய நிபுணர்கள் மேற்கொண்டனர். தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வைத்திய கலாநிதி எஸ் முகுந்தன் தெரிவிக்கையில், 'தற்போது இதய சத்திரசிகிச்சை கூடத்தில் போதிய இடவசதிகள் இல்லாமல் இருக்கிறது. கட்டில்களே காணப்படுகின்றது. சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவையும் போதியளவில் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. அத்துடன் வைத்தியர்கள், தாதியர்கள், சத்திரசிகிச்சை கூட ஊழியர்கள், போன்ற மனிதவலு தேவைகளும் அதிகமாக காணப்படுகின்றது.

அதேவேளை இதய சத்திரசிகிச்சை கூடம் மேல் மாடியில் உள்ளது. அங்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நோயாளியை கீழ் தளத்தில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு நோயாளியை மின்தூக்கி (லிப்ட்) ஊடாக கொண்டு வருவதற்கும் பலத்த சிரமத்தை எதிர்கொண்டோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பலரும் இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை 360 நோயாளர்கள் பதிவு செய்து சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அதில் சிலர் 10 , 12 வருடங்களாக கூட சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். கடந்த காலங்களில் யாழ்.போதனா வைத்திய சாலையில் திறந்த இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டமையினால் , நோயாளர்கள் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்திய சாலைக்கே சிகிச்சைக்காக சென்றனர். அதற்காக பலர் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்ததில் பலர் சிகிச்சை பெற முடியாத நிலைமை ஏற்பட்டு உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் , இரண்டு சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளோம். எமக்கு தேவையான வசதிகளை தந்து உதவினால் நாம் தொடர்ந்து வெற்றிகரமாக சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். எமது வைத்திய சாலைக்கு தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு கரிசனை கொண்டு தந்துதவ வேண்டும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி பி.பிரேமகிருஸ்ணா குறித்த சத்திரசிக்கிசையின் போது சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் மயக்கமருந்து பிரிவு என இரண்டு பிரிவுகளாக செயற்பட்டோம். அதற்காக ஆறு வைத்திய நிபுணர்களின் தலைமையில் விசேட வைத்திய குழு ஆறு மணித்தியாலங்களாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டோம். தொடர்ந்து திறந்த இதய சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்யவுள்ளோம். அதற்காக வசதிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன. எதிர்காலத்தில் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் நிலையில் சுதந்திரமானதும் , தன்னிறைவானதுமான சேவைகளை வழங்க தயார் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி என்.குருபரன் யாழ்.போதனா வைத்திய சாலையில் இதய சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படும் போது இருந்ததை விட ஓரளவு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளன. இன்னமும் தேவையாக உள்ள வசதிகளை மேற்கொண்டு தரவேண்டும் என கோருகின்றோம். இதுவரை காலமும் வடக்கு கிழக்கு மக்கள் இதய சத்திர சிகிச்சைக்காக கொழும்பு அல்லது கண்டி தேசிய வைத்திய சாலைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியும். வடக்கு தவிர்ந்து கிழக்கு மாகாண மக்களும் தமிழ் மொழி பேசும் வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவது சில சிரமங்களை தவிர்க்கலாம் என கருதி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெறவே விரும்பு கின்றார்கள். என மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு