மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆட்சேர்க்கும் ஆளுநர் குரே..
மகிந்த அரசின் ஆட்சியை திடப்படுத்தும் முயற்சியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் களத்தில் இறங்கி எதிர் வரிசையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு வற்புறுத்துகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் நேற்று மாலையில் தொடர்பு கொண்டு புதிய அரசிற்கு ஆதரவு வழங்குமாறும்
அதற்காக ஓர் அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்று உங்கள் மக்களிற்கான அபிவிருத்தியை நீங்களே மேற்கொள்ள முடியும். அதற்கு ஓர் சந்தர்ப்பம் என வற்புறுத்தியுள்ளார்.
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நேற்றைய தினம் வடக்கின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தூது சென்ற நிலையில் எமது கட்சியின் முடிவே இறுதியான முடிவு என
ஓர் நாடாளுமன்ற உறுப்பினரும் இவ் விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசுங்கள் என மற்றுமோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பதிலளித்துள்ளனர்.
ஏற்கனவே மகிந்த அணியின் பல பிரிவினர் ஆட்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சமயம் தற்போது ஆளுநரும் களத்தில் இறங்கியுள்ள காரணத்தினால் கொழும்பில் நின்றால் மகிந்தவின் கட்சியினர் தொடர் நெருக்கடிகளை தவிர்க்க எண்ணி
மாவட்டத்திற்கு வருகை தந்தோர் தற்போது ஆளுநரின் வியூகத்தில் இருந்து ஏற்படும் இவ்வாறான இடையூறுகளை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஓர் மாகாணத்தின் ஆளுநர் என்பவர் அரசியல் நியமனமாகினும் மாகாணத்தின் பொதுவான அதிகாரியாகச் செயல்படவேண்டிய நிலையில் இவ்வாறு கட்சிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.