கூரை பிரித்து வீடு புகுந்த கொள்ளையர்கள் முதியவரை தாக்கி கொள்ளை..

ஆசிரியர் - Editor I
கூரை பிரித்து வீடு புகுந்த கொள்ளையர்கள் முதியவரை தாக்கி கொள்ளை..

யாழ்.அராலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கூரையை பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட அராலி செட்டியார் மடம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகளை மிரட்டி நகைகளை கேட்டு உள்ளனர். 

அதன் போது வயோதிப தம்பதிகள் அவல குரல் எழுப்பிய போதும் அந்நேரம் கடும் மழை பொழிந்ததால் அயலவர்களுக்கு அவலக்குரல் கேட்கவில்லை. 

அதனை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 71 வயதுடைய வயோதிப பெண்ணை வாளை காட்டி மிரட்டி நகைகளை கேட்டு உள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே வாளினால் வெட்டி காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு உள்ளனர். 

பின்னர் வீட்டின் உரிமையாளரான 80 வயதுடைய வயோதிபரையும் கொட்டனால் தாக்கி விட்டு , வீட்டினை சுமார் மூன்று மணி நேரம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொள்ளையர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். 

கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னரே அயலவரின் உதவியை வீட்டு உரிமையாளர் கோரி காயமடைந்தவர்கள் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கொள்ளையிடப்பட்ட வீட்டுக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை காயமடைந்த வீட்டு உரிமையாளர்களிடம் கொள்ளையிடப்பட்ட நகை மற்றும் என்பவை தொடர்பில் பொலிசார் விசாரணை செய்த போது அவற்றின் முழுமையான விபரம் தெரியாது எனவும் , வயோதிப பெண் தான் அணிந்து இருந்த 18 பவுண் நகை எனவும் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு