உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவு!

ஆசிரியர் - Editor II
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவு!

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளன. அதன்படி இன்றைய தினமும் பல அரசியல் கட்சிகள் தமது கட்சி சார்பாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை, மூன்று நகரசபை, பன்னிரெண்டு பிரதேச சபைகளிற்கான வேட்பு மனுக்களையே இவர்கள் தாக்கல் செய்தனர். இது தவிர யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி போட்டியிட ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வியாழக்கிழமை (21) தாக்கல் செய்துள்ளன. யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் சமூக ஜனநாயக கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தலமையில் இன்று முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இன்று (21) கிளிநொச்சியில் ஐக்கிய தேசிய கட்சி, சுந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினரும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக வைத்தியர் விஜயராஜன் தலைமையிலான குழுவினரும், ஈபிடிபி சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையிலான அணியினரும் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதேவேளை காத்தான்குடி நகர சபைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல் செய்யப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஏழு உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்புமனுக்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அந்தக் கட்சி சார்பாக தாக்கல் செய்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு