ஜனாதிபதியுடனான தமிழ்தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு. சாியான தீா்மானங்கள் வருமா? சந்தேகம் என்றிகாா் சுமந்திரன்..
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் சரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா? என்பது சந்தேகத்திற்குரியதே என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆனாலும் அழுத்தம் கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நடந்து முடிந்த பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் விவகாரங்கள் தொடர்பில் பேசியிருந்தோம். அரசாங்கம் தாம் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சில விடயங்களை செய்துள்ளது. ஆனால் ஒரு விடயத்தையும் பூரணமாக முடிக்கவில்லை.
இதனால் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கேடு கொடுப்பதற்கு கொடுத்து, அதற்குள் சில விடயங்களை செய்யாவிட்டால் வரவு செலுவு திட்டத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற கருத்து எங்களில் பலர் மத்தியில் உள்ளது.
ஆனால் எந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு நிபந்தனை வைக்கவேண்டும், எந்த காலகெடு கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூட்டமைப்பு இன்னமும் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை.
ஏதிர்வரும் 17 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு சம்மந்தப்பட்ட கூட்டம் ஒன்று ஜனாதிபதி தலமையில் நடைபெறவுள்ளது. அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி எம்மை சந்தித்து பேச உள்ளார்.
அச் சந்திப்பில் தேவை ஏற்பட்டால் சட்டமா அதிபரையும், நீதி அமைச்சரையும் அழைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் அழைப்பது அன்றை சந்திப்பின் போது நடைபெறுமா?
பிறிதொரு தினத்தில் நடைபெறுமா என்று தெரியாது. இந்த வகையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் வைத்து அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமா என்று சொல்ல முடியாது.
ஆனால் கூட்டமைப்பு மிக அழுத்தமாக கோரிக்கைகளை முன்வைக்கும். அந்த கோரிக்கைகள் தொடர்பான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்படும் என்று இப்போது கூற முடியாது என்றார்.
சிங்கள மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் அரசியல் கைதிகள் விடுதலை இலகுவானது..
சிங்கள மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இலகுவாக்கப்படும். என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள மக்களின் ஆதரவி னை பெற தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி தமிழ்தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் சேர்ந்து எதிர்வரும் 25 ஆம் திகதி கூடுதலான நேரத்தை எடுத்து ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளோம்.
இதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெற்கிலே உள்ளவர்களுக்கு அரசியல் கைதிகளின் விவகாரங்களை சரியான விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஜேவிபியுடன் சேர்ந்து செய்கின்றோம்.
தீவிர சிங்கள கட்சிகளும் அமைப்புக்களும் குற்றம் புரிந்த தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்களை எந்த தண்னையும் இல்லாமல் விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிப்பதாக பொய் பிரச்சாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் செய்கின்றார்கள்.
அவை திருத்தப்பட வேண்டும். நீண்ட காலம் தடுப்பில் அவர்கள் உள்ளார்கள் என்றும், வழக்கு முடிந்து தண்டனை கொடுக்கப்பட்டாலும், வழக்கு முடிவதற்கு முன்னரில் இருந்தே அவர்கள் தண்டணை அனுபவித்து வருகின்றார்கள் என்பதை சிங்கள மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும். இதனாலேயே இப்படியான ஒரு ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்க உள்ளோம். அரசியல் கைதிகளும் தாங்கள் எழுதிய கடிதத்தில் தாங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், நீண்டகால தண்டனையை அனுபவித்து வருவதை கருத்தில் கொண்டு,
தமக்கு புணர்வாழ்வு அழித்து விடுதலை செய்யுமாறே கோரியுள்ளார்கள். இந்த உண்மையை சரியான விதத்தில் சிங்கள மக்கள் மத்தியில் தெரியப்படுத்தினால், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து பாரிய ஆதரவு கிடைக்கும்.
அரசியல் கைதிகளின் நிலமை தொடர்பில் சிங்கள மக்கள் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே எதிர்ப்புகள் எழுகின்றது. உண்மையாக நிலையை அவர்களுக்கு தெரிவித்தால் நியாயமாக சிந்திக்கும் எந்த சிங்களவரும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு ஆதரவு தருவார்கள் என்றார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தவறுகளை மக்களுக்கு கூறுவோம்..
சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் முடிவதற்கு முன்பாக அரசியல் அமைப்பு உருவாகினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் வெற்றிகொண்டதாக அமையும். வெற்றிபெறாமல் அது பின்னோக்கி தள்ளப்படுமாக இருந்தால்
அரசியல் தீர்வு தொடர்பில் இதுவரையில் நடைபெற்ற முன்னேற்றகரமான விடயங்களை மக்களுக்கு சொல்லுவோம். இதுதவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளையும் தமிழ் மக்களுக்கு தெரிவிப்போம்.
அடுத்த முறை அவ்வாறான தவறுகளை திருத்திக் கொள்ளுவோம் என்றும் தமிழ் மக்கள் முன் சொல்லுவோம் என்றார்.