தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தரணிகள் பேரவை விடுக்கும் வேண்டுகோள்!

ஆசிரியர் - Editor II
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தரணிகள் பேரவை விடுக்கும் வேண்டுகோள்!

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சில கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையினை இங்கே இணைக்கிறோம்.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை ஏற்றுக் கொள்ளாத, மிகத் தெளிவாக வரையறுக்காத, புதிய அரசியலமைப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை (Tamil Lawyers Forum) வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013 ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனமும், 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனமும் பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. இதற்கு தமிழ் மக்களும் ஆணை வழங்கினார்கள். அதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தேர்தல்களிலும் வெற்றியீட்டியது. ஆதலால், தமிழ்மக்களின் ஆணைக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவிக்கிறது.

தமிழர்களின் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டே, பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதில் தமிழ்த் தலைமைகள் பற்றுறுதியோடு இருந்தன. குறிப்பாக, SJV செல்வநயகம் அவர்களின் தலைமையிலான தமிழ் அரசு கட்சியும், பின்னர் தமிழர் கூட்டணியும்(TULF) இந்தக் கொள்கையில் உணர்வுபுர்வமான உறுதியுடன் இருந்ததை அனைவரும் அறிவர்.

பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்ற அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்த சிறீலங்கா அரசாங்கங்களுடனான உடன்படிக்கைகளில் SJV செல்வநயகம் அவர்கள் கைச்சாத்திட்டார். 1957 ல் பண்டா - செல்வா உடன்படிக்கை, 1965ல் டட்லி - செல்வா உடன்படிக்கை இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுக்கள். இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதன் ஊடாக பிரிக்கப்படாத வட - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஆட்சிக்கு வந்த சிறீலங்கா அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டன.

இந்திய - சிறீலங்கா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதனூடாக, தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு பிரிக்கப்படமுடியாதது என்பதை சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், தமிழர் தாயகத்தின் அடிநாதமான இணைந்த வட-கிழக்கு தொடர்பான சிறீலங்கா அரசின் நிலைப்பாடு தற்போது முற்றுமுழுதாக மாறியுள்ளது. அது, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.

அதேவேளை, இணைந்த வட- கிழக்கு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலும் மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. இது தமிழ் மக்களின் கொள்கைக்கு எதிரானதுடன், தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயல் ஆகும். ஆதலால், தமிழ் மக்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் உறுதிப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தும் சூழல் எழுந்துள்ளது.

தமிழர் தாயகத்தை பிரிப்பதனூடாக, தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் அரசியலமைப்புக்கு தமிழ் தலைமைகள் ஆதரவு தெரிவிக்குமானால், இலங்கைத் தீவின் சமகால அரசியற் சூழலோடு தமிழ் மக்கள் திருப்தியடைகிறார்கள் என்ற தவறான செய்தி சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுவிடும்.

இது, தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக அமையும். அத்துடன், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதி கிடைப்பதையும், சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களுக்கு உரித்தான காணிகள் விடுவிக்கப்படுவதையும், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையையும், வலிந்து காணமற் போகச் செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது, என அறிய முயலும் நடவடிக்கைகளையும் நெருக்கடிக்குள் தள்ளும்.

கடந்தகால அரசியல் யாப்புகள், தமிழர்களின் இறைமையை மறுத்தலித்ததோடு, தமிழ் தேசத்தினை அங்கீகரிக்கவில்லை. அத்துடன், சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதற்கு துணைநின்றன. அதன்காரணமாக, கொள்கையில் உறுதியாக நின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த கால அரசியலமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

எதிர்வரும் 2018 சனவரி மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளியுள்ளதுடன், சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.

அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான விட்டுக்கொடுப்புகளும், பிரதிபலனற்ற சமரச நடவடிக்கைகளும் ஏற்கெனவே தமிழர்களின் உரிமைகளைத் தாரைவார்க்கும் சரணாகதி நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதனைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நினைவுபடுத்தும் கடமை மக்களுக்கு உண்டு.

அதேவேளை, தமிழர்களை நிரந்த அடிமைகளாக்கும் நோக்கோடு தமிழர்களைப் பிரித்து ஆளும் தென்னிலங்கை அரசின் திட்டத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணைபோவதை நிறுத்த வேண்டும் எனவும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.

குறிப்பாக, தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை மிகத் தெளிவாக வரையறுக்காத வகையிலேயே புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் காணப்படுகிறது. அதுவே, புதிய அரசியலமைப்பின் இறுதி அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுமாக இருந்தால், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இத்தால் வேண்டுகோள் விடுக்கிறது.

தொடர்புகட்கு:

K.S. இரத்தினவேல்,

ஒருங்கிணைப்பாளர்(Convener)

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை (Tamil Lawyers Forum)

Email: ksratna15@gmail.com

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை

Tamil Lawyers Forum

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு