குளமாக மாறியுள்ள யாழ்.நகரை அண்டியுள்ள முக்கிய வீதி: சீர் செய்யுமா யாழ். மாநகர சபை?

ஆசிரியர் - Admin

யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள தட்டாதெருச் சந்தியையும், கந்தர்மடம் சந்தியையும் இணைக்கும் முக்கிய வீதியான அரசடி வீதியின் ஒருபகுதியில் அதிக மழை வெள்ளநீர் தேங்கி நிற்கின்றமையால் குறித்த பகுதி மக்களும், வீதியால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வீதி யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய வீதியாக அமைந்துள்ளது. இந்த வீதிக்கு அண்மையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி உள்ளிட்ட பிரபல பாடசாலைகள் அமைந்துள்ளன.

குறித்த பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள பல்வேறு பாடசாலைகளுக்கும் செல்லும் அதிகளவு மாணவ, மாணவிகள் தினம் தோறும் இந்த வீதியையே தமது போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.


அது மாத்திரமன்றி அரச, தனியார் உத்தியோகத்தங்களுக்குச் செல்லும் பல நூற்றுக்கணக்கானவர்களும், வயோதிபர்களும், நோயாளர்களும் தினம் தோறும் இந்த வீதியாலேயே பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(02) சுமார் அரைமணித்தியாலம் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையையடுத்து மேற்படி வீதியின் ஒரு பகுதியில் தார் வீதியை மேவி அதிகளவு வெள்ளநீர் குளம் போன்று தேங்கிக் காணப்பட்டது.

இதனால், வீதியால் போக்குவரத்துச் செய்தோர் கடும் இடர்பாடுகளை எதிர்கொண்டமையை நேரடியாக அவதானிக்க முடிந்தது.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலரிடம் வினாவிய போது, இந்த வீதியில் கடந்த பல வருட காலமாக மழைகாலங்களில் மழை வெள்ளநீர் தேங்கி நிற்பது தொடர்கதையாகவுள்ளதாகவும், கடுமையான மழைகாலங்களில் அரசடி வீதியில் தேங்கும் வெள்ளநீர் சில வீடுகளுக்குள் உட்புகுவதாகவும், இதனால் தாம் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.


மேற்படி வீதி யாழ். நகரை அண்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய வீதியாகக் காணப்படும் நிலையில் வீதி உரிய பொறிமுறைகளுடன் அமைக்கப்படாமையே வெள்ளநீர் அதிகளவு தேங்கி நிற்பதற்குக் காரணமெனப் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

சாதாரண மழைகாலங்களிலேயே வெள்ளநீர் அதிகளவு தேங்கி நிற்கும் நிலையில் கடுமையான மழைகாலங்களில் தாம் பெரும் பாதிப்பிற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மழைகாலங்களில் தொடர்ச்சியாக வெள்ளநீர் தேங்கி நிற்கின்றமையால் தாம் சுகாதார ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாகப் போக்குவரத்துக் காணப்படும் நிலையில் அதனை உரியவாறு சீர் செய்து கொடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையல்லவா?

யாழ். மாநகர சபை ஆணையாளரே! இது உங்களின் கவனத்திற்கு…

யாழ். நகரை அண்டியுள்ள அரசடி வீதியில் நிலவும் குறைபாடுகளைச் சீர்செய்து போக்குவரத்துக்கு உரியவாறு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கும் மக்களின் குரல்களுக்கு நீங்கள் செவி சாய்ப்பீர்களா?


காணொளி:- செ.ரவிசாந்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு