SuperTopAds

பட்டப் பகலில் வீடு உடைத்துக் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
பட்டப் பகலில் வீடு உடைத்துக் கொள்ளை!

மன்னார் - பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் திங்கள் கிழமை (22) காலை பத்து மணிக்குப் பிற்பாடு பேசாலை பகுதியிலுள்ள அரச ஊழியர்களின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டத்திலிருந்து தெரிய வருவதாவது,

சம்பவம் அன்று மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் இவ்வீட்டின் மனைவி வழமைபோன்று காலையில் தனது கடமைக்காக அலுவலகம் சென்ற பின் ஒரு பிரபல பாடசாலையில் பிரதி அதிபராக கடமைபுரியும் கணவன் 

பாடசாலை விடுமுறையாக இருந்தபோதும் தனது பிள்ளைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேறு அலுவலுக்காக வெளியில் சென்றுள்ளார்.பின் பகல் ஆசிரியரான கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது கதவு உடைபட்டு இருந்ததைக் கண்டுள்ளார்.

இதன்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் தாலிக்கொடி உட்பட பதின்மூன்று அரை பவுன் நகைகளும் ஐம்பதாயிரம் ரூபா பணமும் களவாடிச் செல்லப்பட்டதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருடனை கண்டு பிடிக்கும் நோக்குடன் பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. 

இது வரைக்கும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படாத போதும் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக்காலமாக பேசாலை பொலிஸ் பிரிவில் பட்டப்பகலில் அரச ஊழியர்களின் வீடுகள் கொள்ளையர்களால் கண்ணமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.