கிளிநொச்சியில் குடிநீர் விநியோகப் பகுதி அடித்துடைப்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா?
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினைகளைப் போக்குவதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகப் பகுதியும், பெயர்ப்பலகையும் நேற்றிரவு(28) திட்டமிட்ட வகையில் விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் காவல்துறை இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதுள்ளனர்.
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினைகளைப் போக்குவதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்பாக மாயவனூர் முன்பள்ளி மற்றும் பொதுநோக்கு மண்டபம், சனசமூக நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இணைப்புச் செய்யப்பட்ட குழாய் நீரை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தநிலையிலேயே குடிநீர் விநியோகப் பகுதியும், பெயர்ப்பலகையும் நேற்றிரவு திட்டமிட்ட வகையில் விஷமிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் நீண்ட காலங்களாக குடிநீர்ப் பிரச்சினை நிலவிவந்த நிலையில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் புவனேஸ்வரன் குறித்த பிரச்சினையை வெளிக்கொண்டு வந்த பின்னர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குடிநீர் விநியோகத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
ஜேர்மனியில் வாழும் சந்திரராஜா என்பவரின் குடும்பத்தினர் இந்தத் திட்டத்துக்கான நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்தார்.
நுற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த விநியோகத் திட்டம் ஊடாக வழங்கப்பட்டு வந்த குடிநீரைப் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த மாதம் ஏட்டிக்குப் போட்டியாக கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளரினால் குறித்த குழாய் நீர் செயற்படுத்தப்படும் மாயவனூர் பொதுநோக்கு மண்டபத்திற்கு எதிரில் தண்ணீர்த் தாங்கியொன்று வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தண்ணீர்த் தாங்கியைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாத நிலையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி சம்பவம் அரங்கேற்றப்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் சம்பவத்துக்கான காரணமா? எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.