SuperTopAds

மீளக்குடியேறிய குடும்பங்கள் மீது தாக்குதல் - சிவில் பாதுகாப்பு படை அடாவடித்தனம்!

ஆசிரியர் - Admin
மீளக்குடியேறிய குடும்பங்கள் மீது தாக்குதல் - சிவில் பாதுகாப்பு படை அடாவடித்தனம்!

இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட காணிகளில் குடியேறியிருந்த குடும்பங்களை, சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் இன்று ​வௌியேற்ற முயற்சித்ததால், கிளிநொச்சி – சாந்தபுரம், அம்பாள் நகர் பகுதியில், இன்று பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது, சிவில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.

குறித்த பகுதியில், ஏற்கனவே மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளில், சுமார் 145 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள், நீண்ட காலமாகப் பராமரப்பின்றிக் காணப்பட்டன. 1983மஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பங்கள், இந்தக் காணிகளில் மீள்குடியேறின. 

இதையடுத்து, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய நிலையில், குறித்த காணிகளை இராணுவம் கையப்படுத்தி, பின்னர் விடுவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்தில் காணிகளின்றி இருந்த 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மேற்படி பராமரிப்பின்றிக் காணப்பட்ட மத்திய வகுப்புத் திட்டக் காணிகளில் கொட்டில்களை அமைத்து குடியேறியிருந்தனர். 

இன்றுகாலை குறித்த காணிக்குள் சென்ற சிவில் பாதுகாப்பு படையினரும் உயர் அதிகாரிகளும், பொதுமக்களின் கொட்டில்களைச் சேதப்படுத்தியதுடன், பொதுமக்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.

அத்துடன், இரண்டு அலைபேசிகளையும் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களையும் கொண்டுச் சென்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இதனால், பொதுமக்களுக்கும் சிவில் பாதுகாப்பு படையினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.