தரகு வேலையில் மன்னார் யாழ் ஆயர் இல்லங்களா?
மன்னாரை தொடர்ந்து யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளர் தொடர்பில் யாழ்.ஆயர் இல்லமும் தலையினை செருகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
யாழ் மாநகரசபை வேட்பாளருக்கு ஆனோல்ட், வித்தியாதரன், ஜெயசேகரன் ஆகியோர் கடுமையான போட்டியிலீடுபட்டு வந்தனர். இந்த போட்டியிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் தற்போது அகற்றப்பட்டுள்ளார்.
தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலின் கீழ் முன்னாள் வணிகர் சங்க தலைவரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான இ.ஜெயசேகரனை சந்தித்த ஆனோல்ட் ஆயர் இல்லம் தன்னையே முன்மொழிவதாக தெரிவித்ததுடன் அதனால் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கோரியுள்ளார்.
ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் மன்னார் ஆயர் இல்லம் அரசியல் தரகுவேலைகளினில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் யாழ்.ஆயர் இல்ல தலையீடு கடுமையான சீற்றத்தை இ.ஜெயசேகரன் மற்றும் வர்த்தக சமூகத்திடையே தோற்றுவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இவ்விடயத்தினை இந்து அமைப்புக்கள் வசம் சிலர் கொண்டு சென்றிருந்தனர்.இதனால் வீணான மத குழப்பங்களை இம்முயற்சிகள் தோற்றுவிக்கலாமென்ற எச்சரிக்கையினை சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ளனர்.
தற்போதைய வடமாகாணசபை உறுப்பினரான ஆனோல்ட் கத்தோலிக்க கிறீஸ்தவரென்ற வகையில் ஆயர் இல்லம் குரல் கொடுப்பதாக சொல்லப்பட்டாலும் உத்தியோகபூர்வமான ஆயர் இல்ல அறிவிப்புக்கள் ஊடகங்களிற்கு கிட்டியிருக்கவில்லை.