யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள புராதன சின்னங்களை மாநகரசபை கையேற்கவேண்டும்..
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள புராதன சின்னங்களை மத்திய அரசிடமிருந்து மீட்டு சுற்றுலா தலங்களாக மாற்றி யாழ்.மாநகரசபை அதனை பராமரிக்கவேண்டும். என மாநகரசபையில் இன்று தீர்மானம் நிறகவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. இவ்வமர்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் பிரேரணையினை முன்வைத்தார்.
வடக்கில் உள்ள முக்கிய உள்ளுராட்சி நிறுவனமாக யாழ்.மாநகர சபை திகழ்கின்றது. எனவே இச் சபைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டி தேவையும் உள்ளது.
இதனால் யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களை சபையின் நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அதனை சுற்றுலா தளமாக மாற்றி அதன் ஊடாக வருமானத்தை ஈட்ட முடியும்.
குறிப்பாக யாழ்.கோட்டையினை எமது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட உறுப்பினர் தனுஜன், மத்திய அரசாங்கம் இங்குள்ள புராதன சின்னங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை செய்து வருகின்றார்கள்.
ஆகவே அதனை நாங்கள் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது புராதன சின்னங்கள் எமக்கு இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும், அல்லது வரலாறு மாற்றப்பட்டுவிடும்.
முதலில் யாழ்.கோட்டையினை மாநகர நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்றார். இக் கோரிக்கை சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறித்த பிரேரணை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.