யாழில் போதைப்பொருள் கடத்துவது யார்? வெளிப்படுத்திய துவாரகேஸ்வரன் -

ஆசிரியர் - Editor II
யாழில் போதைப்பொருள் கடத்துவது யார்? வெளிப்படுத்திய துவாரகேஸ்வரன் -

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரின் பேருந்துகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகளில் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“பொலிஸாரின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலை காரணம் காட்டி இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொழும்புக்கு செல்கின்றனர். இந்நிலையில், பொலிஸாரின் சோதனை நடவடிக்கையினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினரின் பேருந்துகளிலேயே அதிகளவான போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. இது பொலிஸாருக்கும் நன்கு தெரியும்.

இதனிடையே, போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் பயணிகள் சேவையில் பேருந்துகள் ஈடுபடுவதுடன், இவ்வாறான பேருந்துக்கள் மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இது குறித்து, அமைச்சர் சாகல ரட்னாயக்க மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு