கமகமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்!!
யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும்.
அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது.
ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது.உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசுஇ கோதுமையை அறிமுகப்படுத்தியது.
இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் யாழ்ப்பாண உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம்.
யாழ்ப்பாணத்தவர்களால் பாண் (Bread), பிட்டு, இடியப்பம், தோசை என்று அழைக்கப்படும் கோதுமை உணவு அப்பிரதேச உணவில் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும்.
அது மட்டுமன்றி, சிற்றுண்டிகள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், குரக்கன் முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது.
முதன்மையான உணவு வகைகள்:
யாழ்ப்பாணத்து முதன்மை உணவு சோறும் கறியும் ஆகும். யாழ்ப்பாணத்தவர், நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள்.
இதைத் தவிர, நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும். சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு.
பருப்புக் கடையல். குழம்பு (கத்தரிக்காய் வாழைக்காய்,உருளைக்கிழங்கு, பூசனிக்காய்) பாகற்காய் வரட்டல் தூள் கறி,பால் கறி கீரைக் கடையல், வறை, துவையல், சம்பல், பொரியல் (வாழைக்காய் மரவள்ளிக் கிழங்கு உருளைக் கிழங்கு) சொதி.
கறிவகைகள் – சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள் இலைவகைகள் மீன் மாமிசம் போன்றவை. துணை உணவு வகைகள் – இடியப்பம் பிட்டு அப்பம் தோசை வெங்காயம் பாண் அவித்த கிழங்கு வகைகள்,
பனம் பண்டங்கள்– ஒடியல் மா உணவுகள், ஒடியற் கூழ்.
பருகுவதற்கானவை- பழஞ்சோற்றுத் தண்ணீர், பால், மோர், கருப்ப நீர், இளநீர் தேநீர், காப்பி, கஞ்சி.
பழவகைகள்- மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், தோடம்பழம்,
இனிப்பு வகைகள் மற்றும் பிற சிற்றுண்டிகள்– பயத்தம், பணியாரம், மோதகம், கொழுக்கட்டை, அரியதரம், அவல், சுண்டல், பால்ரொட்டி, முறுக்கு என்பனவாகும்