காரைநகா் கடற்படையால் பறிபோன வீட்டுத்திட்டம்

ஆசிரியர் - Editor II
காரைநகா் கடற்படையால் பறிபோன வீட்டுத்திட்டம்

காரைநகர் மடத்து வளவு மாதிரி கிராம மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் கடற்படையின் அசண்டயீனத்தால் பறிபோயுள்ள போதிலும், குறித்த வீட்டுத்திட்டம் திரும்பி செல்லாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையினை அடுத்து தற்போது சங்கானை வீசி வளவு மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் நிதி உதவியுடன் மாவட்டத்துக்கு தலா 5 லட்சம் பெறுமதியான 24 வீடுகள் வழங்கும் திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு கிடைத்திருந்தது.

இந்த வருடம் யாழ் மாவட்டத்துக்கு 24 வீடுகள் அமைப்பதாக உத்தேசிக்கப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்திற்குரிய 24 வீடுகளையும் காரைநகர் மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு வழங்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது அப்பகுதியை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளனர். குறித்த மாதிரிக்கிராமத்தை அண்டிய 126 ஏக்கர் காணி தற்போது கடற்படையினர் வசம் உள்ளது.

இதில் 76 ஏக்கர் நிலப்பகுதியை கடற்படை ஏற்கனவே சுவீகரித்துள்ளது. ஏனைய பகுதிகளை எந்த காரணமும் இன்றி தற்போதும் தம்வசம் வைத்துள்ளனர்.

அந்த பகுதியில் அண்ணளவாக 6 ஏக்கர் காணியே மேற்குறித்த மடத்து வளவு மாதிரி கிராமத்துக்கு சொந்தமானதாக உள்ளது. குறித்த பகுதியை இதுவரை கடற்படையினர் பொதுமக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்காமல், முள்வேலி அமைத்து தம்வசம் வைத்துள்ளனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிதிகள் குறித்த கடற்படைக்கு பல தடவை அறிவித்திருந்த போதும் கடற்படையினர் காணிகளை விடுவிக்கவில்லை.

இதனால் மடத்து வளவு மக்களுக்கு வழங்க விருந்த குறித்த வீட்டுத்திட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் குறித்த வீட்டுத்திட்டம் ஆரம்பிக்காவிட்டால் அத் திட்டம் திரும்பி போகும் என்ற நிலையில் குறித்த திட்டத்தை சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அராலி வீசி வளவு மாதிரி கிராம மக்கள் 24 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மடத்து வளவு காணி கடற்படையால் விடுவிக்கப்படும் பட்சத்தில் அடுத்த வருடம் மேலும் 24 வீடுகள் அமைப்பதற்கான மேற்குறித்த திட்டத்தில் அப்பகுதி மக்கள் உள்வாங்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு