யாழில். மகளின் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை தொலைத்த தாய் - கண்டெடுத்து கொடுத்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் தவறவிடப்பட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான ஒரு தொகை நகையை உரிமையாளரிடம் கொடுத்த நபருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகையை வங்கியில் இருந்து எடுத்து, வீட்டிற்கு பேருந்தில் செல்லும் போது, பெண்ணொருவர் , நகையை பேருந்தில் தவற விட்டுள்ளார்.
அதனை பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் கண்டெடுத்த நிலையில் , நகைகளின் உரிமையாளரை கண்டறிய யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நகை காணாமல் போனமை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளனவா என தேடியுள்ளார்.
அதன் போது , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ,அதன் மூலம் நகையின் உரிமையாளரை கண்டறிந்து மதகுரு உள்ளிட்ட சமூக தலைவர்கள் முன்பாக நகை உரிமையாளரை அழைத்து நகைகளை அடையாளம் காட்டிய பின்னர் உரிமையாளரிடம் நகைகளை கையளித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து , நகைகளை மீள உரிமையாளரிடம் கையளித்த நபரின் நற்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.