SuperTopAds

யாழில். அதீத போதையால் உயிரிழந்த இளைஞன்

ஆசிரியர் - Editor II
யாழில். அதீத போதையால் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு (119) வந்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்த சம்பவத்தில் , உயிரிழந்த இளைஞன் அதீத போதை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது 

அந்நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் , மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் அழைப்பினை மேற்கொண்டு , அவசரமாக பொலிசாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் (மொபைல்) சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு , தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர். 

அங்கு பொலிஸார் சென்ற வேளை  இளைஞன் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டமையை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்திலையே  வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இளைஞனின் பெற்றோர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்காக சென்றுள்ளனர். 

வீட்டில் உயிரிழந்த இளைஞனும் , இளைஞனின் சகோதரனுமே தங்கி இருந்துள்ளனர். அந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை சகோதரர்கள் இருவரும் தமது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நள்ளிரவு நேரம் நண்பர்கள் சென்ற நிலையில் , சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த வேளை , அதிகாலை உயிரிழந்த இளைஞனை காணவில்லை என சகோதரன் தேடியுள்ளார்.

அவ்வேளை வீட்டின் வெளி வளவில் தனது சகோதரன் சுயநினைவற்ற நிலையில் விழுந்து காணப்பட்டமையால் , பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பு எடுத்து பொலிசரின் உதவியை நாடியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.