கனடியரின் முறைப்பாட்டில் கைதான அருண் தம்பிமுத்து பிணையில் விடுதலை!

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்
மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில் அந்த வர்த்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடி 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்று அதற்கான வர்த்தக நடவடிக்கை இடம்பெறாமல் நிதியை மோசடி செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள சிஜடி நிதி மோசடி பிரிவினரிடம் முறப்பாடு செய்துள்ளார்
இதனையடுத்து குறித்த முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர், பாசிக்குடாவில் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த வந்த சிஜடி நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் புதன்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமேகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்கு வர்த்தகம் தொடர்பானது. இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்த நிலையில் நீதவான் அவரை 3 கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம் 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.