சுயேச்சைக் குழுத் தலைவர் சட்டத்தரணி கே.எல்.சமீம்- நோன்புப் பெருநாள் செய்தி
ஆசிரியர் - Editor III
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என இறக்காமம் பிரதேச சபை கால்பந்து சின்னம் சுயேச்சைக் குழுத் தலைவர் சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான அஸ் ஸவ்ம் அல்லது ரமழான் நோன்பு உலகாயத ஆசைகளில் இருந்து விலகி ஒரு தூய முன்;னுதாரணமான வாழ்வொழுங்கைப் பின்பற்றி வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. உலகெங்கிலும் பசியினால் வாடுவோருக்கு உதவுவதற்கும் உள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
முன்னெப்போதுமில்லாத வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம்கொடுத்துள்ள இதுபோன்றதொரு காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக் கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தியாகும்.இந்த ரமழானில் நாம் எவ்வாறு அல்லாஹு தஆலாவுடனும் அல்-குர்ஆனுடனும் தொடர்பில் இருந்தோமோ, வணக்க வழிபாடுகளில் மூழ்கித்திழைத்தோமோ, பாவங்களை விட்டும் தூரப்பட்டு நன்மைகளில் அதிகமதிகம் ஈடுபட்டோமோ, அதனைப் போன்று எதிர்வரக்கூடிய காலங்களிலும் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப சமூக வாழ்வு, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக திகழவேண்டும். அதற்கான பயிற்சியினையே சென்ற ரமழான் எமக்கு அளித்துவிட்டுச் சென்றிருக்கிறது. புனித ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று மாலை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
அதே போன்று அனைத்து முஸ்லிம்களும் ரமழானிலே எப்படி ஒருமித்து நோன்பு நோற்று சமூக ஒற்றுமையினை வெளிக்காட்டினோமோ, அதே ஒற்றுமையினை தேசத்தின் நலனுக்காகவும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்காகவும் கடைபிடித்து நாட்டிற்கு பாத்திரமானவர்களாக திகழவேண்டுமென இப்பெருநாள் தினத்திலே வலியுறுத்துகிறேன்.எனவே, நம்பிக்கையீனம், சந்தேகங்களை கலைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நம்புகிறேன்.
ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.