SuperTopAds

இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்!

ஆசிரியர் - Admin
இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்!

தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை நடந்த இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பட்டலந்த வதைமுகாம் தொடர்பான செய்திகள் தற்போது மிகப் பரவலாக வெளிவருகின்றன. பட்டலந்த என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் இருந்த ஜே.வி.பி போராளிகளை கைது செய்து கொண்டு சென்று அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை இவ்வளவு காலமும் கிடப்பில் இருந்து, இப்போது அல்ஜசீராவுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலுக்கு பின்னர் அந்த அறிக்கை வெளியில் வந்துள்ளது.

1988 மற்றும் 1989இல் நடந்த ஜே.வி.பி மீதான படுகொலைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.நா.வில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்தார். ஜே.வி.பி. மீதான படுகொலைகள் தொடர்பான செய்தியை அவர் அங்கு கொண்டு சென்றிருந்தார். ஆனால் அந்தக் காலத்தில் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. ஜே.வி.பி. அடுத்து வந்த ஆண்டுகளில் சந்திரிகாவுடன் இணைந்து ஆட்சி செய்த போதும் பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. அந்த விடயத்தை இப்போது கையில் எடுத்திருப்பது நியாயமானது. இது தொடர்பில் விசாரணை வேண்டும். படுகொலை செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு நீதி வேண்டும்.

கதிர்காமத்து அழகி மனம்பேரியை சொந்த சகோதர இராணுவத்தினரே நிர்வாணமாக்கி படுகொலை செய்தார்கள் என்பது உலக வரலாற்றில் மிக கேவலமான பதிவாக உள்ளது. அவ்வாறான இந்த நாட்டில் அதற்கு நீதி வேண்டும் என்று நான் பல தடவைகள் கூறியுள்ளேன். அதேபோன்று தமிழ்த் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா, கிருஷாந்தி போன்றோர் பாலியல் வன்புணர்வுக்கு பின்னர் அவர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுக்கான நீதி விசாரணைகளையும் நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம்.தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை . ஆனால் சிங்கள மக்களுக்கு அவர்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளில் தமிழர்கள் மீது படிப்படியாக பல இடங்களில் படுகொலை முயற்சிகள் இடம்பெற்றன.

குறிப்பாக 1956 - 1958 காலப்பகுதியில் இலங்கையில் தமிழினம் மீது நடந்த மிகப்பெரிய இனப்படுகொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 1970 மற்றும் 1976 காலப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இனப் படுகொலைகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் 1983இல் நடந்த ஜூலை படுகொலை மிகப்பெரிய இனப்படுகொலையாக உலக அரங்கில் பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் 2006இல் வாகரையில் நடந்த இனப்படுகொலை, 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி இனப்படுகொலை என்பன இந்த நாட்டில் மிகவும் முக்கியமானவையே. இதற்கான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

நாங்கள் பாதிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட ஒரு இனம். உணவுகூட அனுப்பாமல் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 4 இலட்சத்து 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறுதி யுத்தம் நடைபெறும் போது, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியில் இருந்தனர். ஆனால் 70 ஆயிரம் பேரே இருக்கின்றனர் என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவும்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கூறி, 70ஆயிரம் பேருக்கான உணவுப் பொருட்களையே அனுப்பினர். இதில் எத்தனைப் பேர் பட்டினியால் கொல்லப்பட்டிருப்பார்கள். இது தமிழ்த் தேசிய இனம் மீதான மிகப்பெரிய இனப்படுகொலையாக இந்த உலகத்தால் பார்க்கப்படுகின்றது.

கனடா நாடு இந்த விடயத்தில் தனது கரிசனையை கொண்டுள்ளது. அங்குள்ள இரண்டு கட்சிகள் இங்கு நடந்தவை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளன. சர்வதேச அடிப்படையில் இந்த விடயம் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கை விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால் இங்கு நடைபெற்றது இனப்படுகொலை இல்லை என வாதிடுகின்றீர்கள். அதுபற்றி பேசுவதில்லை.

ஆனால் பட்டலந்த படுகொலை தொடர்பில் பேசுவதற்கு தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாக கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை நாங்கள் தமிழர்களாக வலி உணர்ந்த மக்களாக வரவேற்கின்றோம்.

தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலை தொடர்பில், தமிழ்த் தேசிய இனத்தின் மீதான படுகொலை தொடர்பில் ஏன் இந்த அரசால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். பன்னாட்டு நீதியாளர்களின் ஆலோசனைகளை பெறுகின்றோம். தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்கின்றோம்,தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி காண்பதற்கு கலப்பு பொறிமுறையை கையாளுகின்றோம் என்று ஏற்றுக்கொண்டார். ஒரு அரசாங்கம் இருக்கும் போது ஏற்றுக்கொண்டதை கோட்டபய ஆட்சிக்கு வந்ததும் நிராகரித்தார். இந்த அரசாங்கமும் வந்த போது இதனை எதிர்த்து நிராகரித்துள்ளனர்.

நாங்கள் இந்த மண்ணில் உங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகின்றோம். இதனை நாங்கள் பல தடவைகள் பதிவு செய்துள்ளோம். ஆனால் நீங்கள் நீங்களாகவும், நாங்கள் நாங்களாகவும் எங்களுடைய தனித்துவங்கள், அடையாளங்கள் நிராகரிக்கப்படாமல் வாழ்வதற்கான உரிமைகள் இந்த மண்ணில் இருக்க வேண்டும். அது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வாகத்தான் அமைய முடியும்.

ஒற்றையாட்சி இலங்கைக்குள் இந்தத் தீர்வு ஒரு இனத்தை இன்னுமொரு இனம் சுரண்ட முடியாமல், கபளிகரம் செய்ய முடியாமல் மற்றும் அடக்காமல் இருப்பதற்கான வழிமுறை ஒற்றையாட்சிக்குள் உருவாக முடியாது. ஆனால் ஒரு நாடாக இருப்பதற்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பதுஇ அந்த நாட்டில் வாழும் பல்தேசிய இனங்களை அரவணைத்து செல்வதற்கான மிகப்பெரிய பாதையாக மாறும்.

பட்டலந்த வதை முகாம் எல்லோருடைய இரத்தத்தையும் உறைய வைத்துள்ளது. அங்கு நடந்தது குற்றமென்றால் அது நிரூபிக்கப்படவும்இ உரியவர்கள் கைது செய்யப்படவும் தண்டடிக்கப்படவும் வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதேபோன்று நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏன் விசாரணை செய்ய தயங்குகின்றீர்கள்?.

அத்துடன் நாகர்கோவிலில் நடந்த படுகொலைகள், மண்டைதீவில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பில் ஏன் நீங்கள் சிந்திக்க தவறுகின்றீர்கள்?. குமுதினி படகில் கொல்லப்பட்ட மக்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது?. குருநகர் கடலில் கொல்லப்பட்டவர்கள், கொக்கட்டிச்சோலையில் கொல்லப்பட்டவர்களுக்கு , வாகரையில் கொல்லப்பட்டவர்களுக்கு, திருகோணமலையில் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது?. நெடுங்கேணி ஒலுமடுவில், அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது?

கொத்துக்கொத்தாக பல இடங்களில் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் நிலங்களை இழந்துள்ளது. இன்னும் தமது சொந்த இடங்களுக்கு போக முடியாமல் மக்கள் இருக்கின்றனர். பௌத்த தேவாலயங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த பிரதேசங்களின் காணிகளை பௌத்த இடங்களுக்குரிய காணி என்று கூறுகின்றனர். இன்னும் காணிகள் எடுக்கப்படுகின்றன. நாட்டின் நீதி என்ன? நீதி எவ்வாறு கிடைக்கும்?

யாழ். செம்மணி சுடலையில் மனித எலும்புகூடுகள் எடுக்கப்பட்டன. அதற்கான நீதி இன்னும் வெளிவரவில்லை. அண்மையில் முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் வீதி அகலப்படுத்தும் பணியின் போது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர்களினதாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெண் போராளிகளின் உள்ளாடைகளுடனும், இலக்கத்தகளுடனும் அவை அந்த புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தாக்கப்பட்ட விதத்தைக்கூட தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் வாயை திறந்த நிலையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். எவ்வளவு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்.

பட்டலந்தை மட்டுமல்ல இந்த நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கில் பலபகுதிகளில் வதை முகாம்கள் உள்ளன. தமிழர் வாழும் பிரதேசங்களில் நீங்கள் மண்ணைத் தோண்டினால் அங்கு தமிழரின் மனித எலும்புகூடுகளை காணும் பிரதேசங்களாக மாறியுள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் இந்த மண்ணில் அழிக்கப்பட்ட தனி தேசிய இனம். நாங்கள் கேட்பது நீதி, அந்த நீதி நியாயமானதாக இருக்க வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கு உட்பட்டதாகவும், மனித நேயத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்தவையாக இருக்க வேண்டும்.மனிதர்களை கொல்வதில் மிகப்பெரிய குற்றமான உணவு அனுப்பாமல் கொல்லுதல், அவர்கள் மீது பராச் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரசு குண்டுகளையும் வீசி கொல்லுதல்,மிகப்பெரிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தல் என்பன மிகப்பெரிய போர்க் குற்றங்களாகும். வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் மிகப்பெரிய அளவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த குண்டுகளின் அடையாளங்களுடன் மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

படைகளிடம் பலர் உயிருடன் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குறைவாக நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு உணவுகளை அனுப்பிய போது எத்தனையோ ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் வழங்கிய கஞ்சிக்காக சின்ன சின்ன கிண்ணங்களுடன் வரிசையில் இருந்த போது பராச் குண்டுகளில் சிக்கி கொல்லப்பட்ட வரலாறு அந்த மண்ணில் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக அதனை நேரில் கண்டவன் என்ற வகையில் கூறுகின்றேன்.

தயவு செய்து நீதி விசாரணையை எல்லாவற்றுக்கும் கொண்டு வாருங்கள். அந்த மக்கள் நம்பக்கூடிய வகையில் அதனை செய்யுங்கள். அதுவே நல்ல செய்தியாக அமையும். பட்டலந்தவில் உங்களுடைய போராளிகளுக்கு நடந்தவற்றை மட்டும் விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு பக்கச்சார்பானதாக மாறும். உங்களை நாங்கள் ஜே.வி.பி போராளிகளாகவே பார்த்தோம். உங்களை பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை.

ஜே.வி.பி போராளிகள் கிளர்ச்சியாளர்கள் என்று கூறினாலும் உங்களுக்காக இரக்கத்துடன் பேசியவர்கள் நாங்கள். களனி ஆற்றில் இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு மிதந்து வந்தபோது அவற்றை பார்த்து கவலையடைந்தவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். எவர் கொல்லப்பட்டாலும் அதற்கான விசாரணை வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

பட்டலந்தவில் இருந்த வதை முகாம் ஒரே இனத்துக்குள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் .ஆனால் எங்கள் மீது திட்டமிட்டு 80 வருடங்களாக மெல்ல மெல்ல எமது நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல இலட்சமான மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர். உணவு அனுப்பாமல்இ தடை செய்யப்பபட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இனப்படுகொலை செய்தனர்.இதனால் தமிழ்த் தேசிய மக்கள் மீதான இனப்படுகொலை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியது.

இதற்கான நீதி விசாரணை வேண்டும். பட்டலந்த என்ற சொல்லில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப்படுகொலையை மறைத்துவிட வேண்டாம். அதுசர்வதேச அளவில் பேசப்படும் பொருள்.இறுதி யுத்தம் நடைபெற்ற போது பல நாடுகளின் செய்மதிகள் இங்கு நடந்த படுகொலைகளை மிகத்துள்ளியமாக படம்பிடித்து வைத்துள்ளன. உலக நாடுகளிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் தமிழ் மக்களின் சாட்சியங்களாக இருக்கின்றன. இதன்படி சரியான நீதி விசாரணை வேண்டும்.

இந்த நாட்டில் உங்களின் கலாசாரம், பண்பாடு, அடையாளம் என்பனவற்றை மதிக்கின்றோம். உங்களுடன் சேர்ந்து வரத் தயாராக இருக்கின்றோம். அதேபோன்று தமிழர்களுடைய தனித்துவம், அவர்களின் தேசிய அடையாளம்,கலாசார அடையாளம் என்பனவற்றை கருத்திற்கொண்டுஇ அவர்களுக்கான நீதியை வழங்க வேண்டும். அதற்கு தயாராகுங்கள். இப்போது முக்கிய சாட்சியாக காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டங்கள் மூவாயிரம் நாட்களையும் கடந்து வீதிகளில் நடக்கின்றன. அவற்றை கருத்தில் எடுத்து நீதிக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும்,அவை உண்மையை கொண்டுவர வேண்டும் என்றார்.