பல பெயர்களில் இயங்கிய கொலையாளி!

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர் தொடர்பாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.
அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண்ணும் நீதிமன்றில் இருந்து தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வௌியாகியுள்ளன.