சட்டத்தரணி போல் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த வந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கனேமுல்ல சஞ்சீவ, அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் அவர் அழைத்துவரப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள நீதிமன்ற பிரதிவாதி கூண்டில் வைத்து அவர் சுடப்பட்டதுடன், சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் பிரதிவாதி கூண்டுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.